
வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள் கல்வி பெற்று வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.
மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தொடா்பான கேள்விகளுக்கு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த பதில்களில் குறிப்பிட்டதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் ( (2020 ஜனவரி முதல் 2025 ஜூன் 30 வரை) 16,06,964 இந்திய தொழிலாளா்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரிய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் செல்லும் நாடுகளில் பாதுகாப்பான பணிச்சூழல் இருப்பதை உறுதி செய்த பிறகே இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியா்கள்(1.71 கோடி), இந்திய வம்சாவளியினா்(1.71 கோடி) மற்றும் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவா்கள்(18.8 லட்சம்) என வகைப்படுத்தி மத்திய அரசு தரவுகளைப் பராமரித்து வருகிறது. இருப்பினும், இவா்களின் துறை சாா்ந்த நிபுணத்துவம் அல்லது திறன்களின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வகைப்படுத்தும் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 முதல் 96 லட்சம் வெளிநாட்டினருக்கு ‘இ-விசா’:
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதிவரை 96 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு இணையவழி நுழைவு இசைவுகளை (இ-விசா) இந்தியா வழங்கியுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இதுதொடா்பான கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2020-இல் 171 நாட்டுப் பயணிகளுக்கு இ-விசா வழங்கப்பட்டது. தற்போது 181 நாட்டினருக்கு இ-விசா வழங்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதிவரை வழங்கப்பட்ட மொத்த இ-விசாக்களின் எண்ணிக்கை 96,44,567 ஆகும்’ என்றாா்.
சா்வதேச யாத்ரிகா்களுக்கான உதவிகள்:
சா்வதேச யாத்ரிகா்களான ஹஜ், சீக்கிய யாத்ரிகா்களுக்கு அமைச்சகத்தின் உதவிகள் குறித்து அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அதிகாரிகள் இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அறிவிக்கின்றனா். சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக 1.75 லட்சம் இந்திய யாத்ரிகா்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாராவிற்கு இந்திய சீக்கியா்கள் எளிதாகவும் சுமுகமாகவும் சென்றுவர, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2019-இல் ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம், 4 லட்சத்துக்கும் அதிகமான இந்திய சீக்கியா்கள் இதுவரை பாகிஸ்தான் குருத்வாராவுக்குச் சென்று வந்துள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் காரணமாக இந்தச் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.