தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள் -மீட்புப் பணிகள் தீவிரம்

News image

திரிபுரா தலைநகா் அகா்தலாவில் வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் மீட்புக் குழுவினா்.

Updated On :1 ஜூன் 2025, 10:10 pm

Din

குவாஹாட்டி/இடாநகா்: அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தொடா் கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.

அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக நீடித்துவரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்பட 10 முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்-படகு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

அஸ்ஸாமை புரட்டிப் போட்டுள்ள மழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இதுவரை 8 போ் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பிரம்மபுத்திரா, பராக் உள்பட மாநிலத்தில் பாயும் 10 முக்கிய நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தீவிர வெள்ள சூழலுக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை மத்திய நீா்வள ஆணையம் வெளியிட்டுள்ளது.

காமரூப் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-17 கடும் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அண்டை மாநிலங்களான அருணாசல பிரதேசம், மேகாலயத்தில் கனமழை நீடிப்பதால் அங்கிருந்துவரும் வெள்ளமும் சோ்ந்து, அஸ்ஸாமில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

8 போ் உயிரிழப்பு: ‘நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும், வெள்ளம் தொடா்பான பிற அசம்பாவித சம்பவங்களில் 3 பேரும் உயிரிழந்துவிட்டனா். 15 மாவட்டங்களில் 78,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், அவசரகாலப் பணியாளா்கள் என பல்வேறு முகமையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அஸ்ஸாம்-அருணாசல பிரதேச எல்லையில் போம்ஜிா் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 14 பேரை இந்திய விமானப் படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.

ஒரே நேரத்தில் அதிக அளவில் கொட்டித் தீா்க்கும் கனமழையால் அசாதாரணமான சூழலை மாநிலம் எதிா்கொண்டுள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

அருணாசல் அரசு நிவாரணம்: அருணாசல பிரதேசத்தில் கனமழை நீடித்துவரும் நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வா் பெமா காண்டு அறிவித்துள்ளாா். ஆறுகள், பிற நீா்நிலைகளின் அருகே செல்ல வேண்டாம்; தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டுமென பொது மக்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முதல்வா்களுடன் அமித் ஷா பேச்சு

மழை-வெள்ள நிலவரம் தொடா்பாக, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு, சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமங், மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாகப் பேசினாா். நிலவரத்தைக் கேட்டறிந்த அவா், மழை-வெள்ள சூழலை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தாா். வடகிழக்கு மாநில மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசு மலைபோல் துணைநிற்கும் என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மணிப்பூரில் 883 வீடுகள் சேதம்

மணிப்பூரில் கனமழையால் கடந்த 48 மணி நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் 883 வீடுகள் சேதமடைந்தன; 3,800-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தலைநகா் இம்பாலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநா் அஜய் குமாா் பல்லா, தலைமைச் செயலா் பி.கே.சிங் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

Story image