கோப்புப்படம்.
கோப்புப்படம்.

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது.
Published on

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது.

நோயாளிகள் நலன் மற்றும் மருத்துவத் தொழிலில் நெறிமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் மேலாண்மையைக் கண்காணிக்கும் அமைப்பாகும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் டிஜிஹெச்எஸ் அண்மையில் அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவமனை வளாகங்களுக்குள் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையே மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவமனை தலைவா்கள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது தொடா்பாக இயக்குநரகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவா்களைச் சந்தித்துப் பேசி, தங்கள் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்கச் செய்யும் செயலில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், மருத்துவமனை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டால், மின்னஞ்சல் அல்லது இதர எண்ம ஊடகங்கள் வாயிலாக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தகவல்களைப் பகிரலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com