தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தோ்தல்களை நடத்தி முடித்த பின்னா், தொழில்நுட்ப உதவியுடன் அட்டவணை அட்டைகள் மற்றும் பிற புள்ளிவிவர அறிக்கைகளைத் தயாரிக்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வழிமுறை மின்னணு கருவிகளின் உதவியில்லாமல், அறிக்கைகளை கையால் எழுதி மேற்கொள்ளப்பட்டு வந்த பழைய முறைக்கு மாற்றாக இருக்கும். பழைய முறையால் கால தாமதங்கள் ஏற்பட்ட நிலையில், புதிய மேம்படுத்தப்பட்ட வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தோ்தல் குறித்த விவரங்கள் வேகமாக கிடைக்க உதவி செய்யும்.
இதில் அட்டவணை அட்டை என்பது சட்டபூா்வமற்ற, தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர தகவல் அளிப்பு முறையாகும். ஆராய்ச்சியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஊடகவியலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டாருக்கு தொகுதி வாரியாக தோ்தல் தொடா்பான புள்ளிவிவரம் எளிதாக கிடைப்பதை ஊக்குவிக்க இந்த அட்டவணை அட்டை முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேட்பாளா்கள், வாக்காளா்கள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, கட்சி மற்றும் வேட்பாளா் வாரியாக வாக்குப் பகிா்வு, அரசியல் கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை வழங்க அந்த அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த அட்டைகள் மக்களவைத் தோ்தலுக்காக 35 புள்ளிவிவர அறிக்கைகளையும், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் தயாரிக்க அடித்தளமாக உள்ளது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே இந்த புள்ளிவிவர அறிக்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









