சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாலையில் பெண்ணை அறையும் பைக் டாக்ஸி ஓட்டுநர்
சாலையில் பெண்ணை அறையும் பைக் டாக்ஸி ஓட்டுநர் படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய பெண்ணை, வாக்குவாதத்தின்போது பைக் டாக்ஸி ஓட்டுநர் அறைந்துள்ளார்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, இச்சம்பவம் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. பைக் டாக்ஸி ஓட்டுநர் சுஹாஸ் என அறியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, ''தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண், ஆரம்பத்தில் புகார் அளிக்கத் தயங்கினார். பின்னர் அவரின் நண்பர்கள் அறிவுறுத்தலின்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பைக் டாக்ஸி ஓட்டுநர் வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார். இதனால் அப்பெண் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் பார்க்க நடந்த இந்த வாக்குவாதத்தின்போது, ஓட்டுநர் அப்பெண்ணை அறைந்துள்ளார். இதில் அப்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்துள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தை அங்கிருந்த பலர் விடியோ பதிவு செய்துள்ளனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில், அந்த விடியோவை ஆதாரமாக வைத்து பெண் புகார் அளித்துள்ளார். பெண்களை பொதுவெளியில் இழிவுபடுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்துப் பேசிய பைக் டாக்ஸி ஓட்டுநர் சுஹாஸ், குறிப்பிட்ட இடத்துக்கு குறுக்கு வழிகளில் சென்று அவரை இறக்கிவிட முயற்சித்தேன். பாதி வழியில் வண்டியை நிறுத்த வலியுறுத்திய அப்பெண், ஆங்கிலத்தில் என்னை கடுமையாகத் திட்டினார். நான் 5 ஆண்டுகளாக பைக் டாக்ஸி ஓட்டுவதாகவும், அனைத்து வழிகளும் தனக்குத் தெரியும் என்பதால் விரைவில் இறங்க வேண்டிய இடத்தை அடைவேன் என்பதை அவருக்கு நான் கூற முயற்சி செய்தேன். ஆனால், அதற்குள் அவர் தனது உணவுப் பையை வைத்துத் தாக்கினார். பொதுமக்கள் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர் இதனைச் செய்ததால், என்னால் பொறுக்க முடியவில்லை. அதற்கு எதிர்வினையாற்றினேன் எனக் குறிப்பிட்டார்.

பயணத்தின்போது நடந்த இந்த சம்பவம் குறித்து தனது மேலாளரிடம் சுஹாஸ் கூறியுள்ளார். காவல் துறையின் விசாரணைக்கும் ஒத்துழைத்துள்ளார்.

இதையும் படிக்க | மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com