அரபு நாட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கிய மருத்துவர்: ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம் நிதியுதவி
பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகம்
பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகம்
Published on
Updated on
1 min read

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் திர்ஹாம்(இந்திய ரூபாயில் சுமார் 1 கோடி) நிதியுதவி வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியாவின் ஏஐ-171 விமானம் ஒன்று அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையம் அருகேயிருக்கும் பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள ’அதுல்யம் விடுதி’ கட்டடத்தின் மீது விழுந்து தீப்பிடித்ததில் விமானத்திலிருந்த 241 பயணிகள் உள்பட அந்த கட்டடத்திலிருந்த மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், அவர்தம் குடும்பத்தினர் உள்பட மொத்தம் 271 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

இந்தநிலையில், விமான விபத்தில் உயிரிழந்த 4 மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கும் 5 லட்சம் திர்ஹாம் நிதியுதவி வழங்கியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவம் சார்ந்த துறையில் தொழில் முனைவோராக உள்ள டாக்டர் ஷம்ஷீர் வாயாலீல்.

விபத்துக்குப்பின் மருத்துவக் கல்லூரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து மீண்டும் வகுப்புகள் ஆரம்பமாகின. இந்தநிலையில், டாக்டர் ஷம்ஷீர் வாயாலீல் வழங்கிய நிதியுதவி பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்கள் மட்டுமில்லாது, இந்த விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் 3 மருத்துவர்களுக்கும் அவர்களை விட்டுப் பிரிந்த ஒரு குடும்ப உறுப்பினருக்கு தலா 1 லட்சத்து 5 ஆயிரம் திர்ஹாம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் தீக்காயங்களுடன் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் உள்பட 14 பேருக்கு தேவையான நிதியுதவி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு தலா 15,000 திர்ஹாம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மொத்தம் 28 லட்சம் திர்ஹாம் தொகை வழங்கியுள்ளார்.

மருத்துவ வளாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில் ‘நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயமும் துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com