பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கண் பார்வைத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தான் நீதிபதியாக தகுதியிருந்தும் தமது குறைபாட்டால் நீதியியல் துறையில் விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்ட மனுதாரரின் தாயார், இது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், பொதுநல மனுவாக இந்த விவகாரத்தை விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவைகளில் நீதிபதிகளாகவும் இதர பொறுப்புகளிலும் நியமிக்கப்படுவதை தடை செய்யும் ‘மத்திய பிரதேச அரசுத் துறை சேவைகள் தேர்வுகள் விதிகள்(ஆள்சேர்ப்பு) 1994’-இல் உள்ள விதி 6(ஏ)-ஐ எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(மார்ச் 3) பிறப்பித்துள்ள உத்தரவில், ‘நீதியியல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒருவரது உடல் குறைபாட்டை காரணம் காட்டி அவரை தடை செய்ய இயலாது’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- “குறைபாடுடைய மனிதர்கள் நீதியியல் துறையில் எந்தவித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். உடல் குறைபாடு காரணமாக எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.
பார்வைத்திறன் குறைபாடுடைய நபர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்படலாம் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலும் ராஜஸ்தானிலும் பார்வைத்திறன் குறைபாடுடைய நபர்கள் நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொருத்தவரை, பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியொருவர் முதல்முறையாக நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டது கடந்த 2009-இல். நீதிபதி டி. சக்கரவர்த்தி, கடந்த 2009-இல் தமிழ்நாட்டில் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


