
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டேவை ராஜிநாமா செய்ய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளார்.
துணை முதல்வர் அஜித் பவாருடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனஞ்சய் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
ராஜிநாமா ஏன்?
பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் மாநில அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, புணேவில் உள்ள காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் வால்மிக் சரணடைந்தார்.
இதனால் தனஞ்சய் முண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, தனஞ்சய் முண்டேவின் முதல் மனைவி கருணா சர்மா, கடந்த 2020ஆம் ஆண்டு பாந்த்ரா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட குடும்ப வன்முறை வழக்கில் பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்தது.
முண்டே மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், முதல் மனைவி மற்றும் மகளின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ. 2 லட்சம் அளிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாருடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முண்டேவை பதவி விலகக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் கொலை ஏன்?
பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை எதிா்த்ததற்காக, மாசாஜோக் கிராமப் பஞ்சாயத்தின் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை வழக்கில் இதுவரை 7 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.