பஞ்சாபில் தியானம்: 30 வாகனங்கள், 100 போலீசாருடன் வந்த கேஜரிவாலுக்கு கண்டனம்!
பஞ்சாபில் தியானம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வந்த கேஜரிவாலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்..

அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வனப்பகுதியில் நடைபெறும் 10 நாள்கள் தியானத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறார்.
இதற்காக ஹோஷியார்பூருக்கு செவ்வாய்க்கிழமை வருகைதந்த கேஜரிவாலுக்கு, 100 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
10 நாள்கள் தியானம்
சமீபத்தில் நடந்துமுடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சியை இழந்தது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தது கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இதனிடையே, காலியாகவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள தியான மையத்தில் நடைபெறும் 10 நாள் தியானத்தில் கலந்துகொள்வதற்காக அரவிந்த் கேஜரிவாலும் அவரது மனைவி சுனிதா கேஜரிவாலும் செவ்வாய்க்கிழமை இரவு பஞ்சாப் வந்தனர்.
ஹோஷியார்பூரில் இருந்து 14 கி.மீட்டரில் அமைந்துள்ள சோஹலில் என்ற வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு உயர் ரக வாகனத்தில் 100-க்கும் மேற்பட்ட பஞ்சாப் போலீசாரின் பாதுகாப்புடன் கேஜரிவால் வருகைதந்தார்.
இன்று மாலைமுதல் 10 நாள்களுக்கு கேஜரிவால் தியானம் செய்யவுள்ளார்.
கேஜரிவாலுக்கு கண்டனம்
இந்த நிலையில், அதிகளவிலான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டதற்கு மாநில அரசையும் கேஜரிவாலையும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
”அன்பைக் கொடுத்த பஞ்சாப் மக்களைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார். உலகம் முழுவதும் விஐபி கலாசாரத்தை விமர்சிக்கும் கேஜரிவால், இன்று டிரம்பைவிட பலத்த பாதுகாப்புடன் வலம்வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் வெளியிட்ட பதிவில்,
“ஒரு காலத்தில் சாதாரண மனிதரைப் போல் வேடமிட்ட அரவிந்த் கேஜரிவால், இப்போது குண்டு துளைக்காத லேண்ட் க்ரூஸர்கள், 100 பஞ்சாப் போலீஸ் கமாண்டோக்கள், ஆம்புலன்ஸ்கள் கொண்ட ஆடம்பரமான வாகன அணியுடன் வலம்வருகிறர்.
தியானம் செய்வதற்காக மகாராஜா போன்று செல்கிறார். அவரது கார் அணிவகுப்பில் முதல்வர் பகவந்த் மானும் இல்லை. தியானத்துக்கு எதற்காக பஞ்சாப் மக்களின் வரிப் பணத்தில் பிரமாண்ட கார் அணிவகுப்புடன் செல்ல வேண்டும்?” எனக் கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...