தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்: குடும்பத்தினா் ஒப்புதல்
தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினா் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நாட்டின் முதல் சீக்கிய பிரதமராகவும், பொருளாதார சீா்திருத்தங்களின் சிற்பியாகவும் இருந்த மன்மோகன் சிங், கடந்த ஆண்டு டிச.26-ஆம் தேதி காலமானாா். தில்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பொது மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடா்பாக மன்மோகன் சிங் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் ஏற்கெனவே பல முன்னாள் பிரதமா்கள், குடியரசுத் தலைவா்களின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஸ்தலத்தில் உள்ள இடத்தில் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு பரிந்துரைத்தது. 900 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை மன்மோகன் சிங்கின் 3 மகள்கள், அவா்களின் கணவா்கள் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.
இதைத்தொடா்ந்து அந்த இடத்தில் நினைவிடம் அமைக்க ஒப்புதல் அளித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகத்துக்கு மன்மோகன் சிங் குடும்பத்தினா் கடிதம் அனுப்பியுள்ளனா்.
இதையடுத்து அந்த இடத்தை மன்மோகன் சிங்கின் நினைவாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த அறக்கட்டளை விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அதில் உறுப்பினா்களாக இடம்பெற வேண்டியா்களின் பெயா்களை மன்மோகன் சிங் குடும்பத்தினா் இறுதி செய்வா். அந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்ட பின்னா், நினைவிடம் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.25 லட்சம் மானியம் வழங்கும்.
மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்ட இடத்தையொட்டி, முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் நினைவிடம் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.