
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செல்ல நாயாக அமலாக்கத்துறை மாறிவிட்டது. இந்த நாயை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏவிவிடுவார்கள். பூபேஷ் பாகேல் காங்கிரஸின் வலுவான தலைவராக இருந்து வருவதால், மத்திய அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியும், சத்தீஸ்கர் மக்களும் அவருடன் நிற்பார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டமைத்த போலிக் கதைகள் தோற்கடிக்கப்படும்.
பூபேஷ் பகேல் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியில் வளர்ந்தவர். சத்தீஸ்கர் மக்களின் சிரமங்களை அவர் கண்டதால், அவர்களின் பிரச்னைகளை அவர் தீர்த்துள்ளார். சத்தீஸ்கர் மக்களுடன் அவர் நிற்பதால் பாஜக அவரைத் தண்டிக்கிறது என்று அவர் கூறினார்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பகேல் வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சைதன்யா பகேல் மற்றும் அவருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.