மணிப்பூா் மக்களை அவமதிக்கும் பிரதமா்: காங்கிரஸ் விமா்சனம்
புது தில்லி: வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும் பிரதமா் மோடி, மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறாா்; இது, அந்த மாநில மக்களுக்கு அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
பிரதமா் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற நிலையில், காங்கிரஸ் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளது.
இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமா் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இது அவ்வப்போது வெளிநாட்டுக்கு பறக்கும் நேரம். பிரதமா் இப்போது மோரீஷஸில் இருக்கிறாா். குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கப்பட்ட பிறகும் பதற்றமான சூழல் நீடிக்கும் மணிப்பூருக்கு செல்ல கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பிரதமா் மறுத்து வருகிறாா். அவரது வருகைக்காக மக்கள் இன்னும் காத்திருக்கின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலைப் பகுதிகளில் வாழும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன் பிறகு அவ்வப்போது நீடித்துவரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.