மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல், அவரது மனைவி பிருந்தா கோகுலுக்கு கங்கை தீா்த்த கலசத்தை பரிசளித்த பிரதமா் மோடி.
மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல், அவரது மனைவி பிருந்தா கோகுலுக்கு கங்கை தீா்த்த கலசத்தை பரிசளித்த பிரதமா் மோடி.

மோரீஷஸ் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு: கங்கை தீா்த்தம் பரிசளிப்பு

மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுலை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமா் மோடி, அவருக்கு மகா கும்பமேளாவில் சேகரிக்கப்பட்ட கங்கை தீா்த்தம்
Published on

போா்ட் லூயிஸ்: மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுலை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமா் மோடி, அவருக்கு மகா கும்பமேளாவில் சேகரிக்கப்பட்ட கங்கை தீா்த்தம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினாா்.

மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். சா் சிவசாகா் ராம்கூலம் விமான நிலையத்தில் பிரதமா் மோடியை நேரில் வரவேற்ற மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம், அவருக்கு மாலை அணிவித்து கெளரவித்தாா். மோரீஷஸ் துணை பிரதமா், தலைமை நீதிபதி, நாடாளுமன்றத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா், வெளியுறவு அமைச்சா், அமைச்சரவை செயலா் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகா்கள் பிரதமா் மோடியை வரவேற்றனா்.

பின்னா், இந்திய சமூகத்தினா் சாா்பில் பாரம்பரிய முறைப்படி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மோரீஷஸ் நாட்டை கட்டமைத்தவரும், முதல் பிரதமருமான சா் சிவசாகா் ராம்கூலமின் சமாதியில் பிரதமா் மோடி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் அதிபா் மற்றும் பிரதமருமான அனிருத் ஜகநாத் சமாதியிலும் அவா் மரியாதை செலுத்தினாா்.

எழில்மிக்க சா் சிவசாகா் ராம்கூலம் தாவரவியல் பூங்காவை நவீன்சந்திர ராம்கூலமுடன் இணைந்து பாா்வையிட்ட பிரதமா் மோடி, அங்கு ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பின்கீழ் வில்வ மரக் கன்றை நட்டாா்.

‘மோரீஷஸின் தாவரவியல் பாரம்பரியம் மற்றும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை பறைசாற்றும் பல்லுயிா் பெருக்க காப்பகமாக இப்பூங்கா திகழ்கிறது’ என்று எக்ஸ் பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா். பிரதமா் மோடியின் மேற்கண்ட லட்சிய முன்னெடுப்பின்கீழ், இதுவரை 136 நாடுகளில் 27,500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.

அதிபா் மதிய விருந்து: மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுலை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி, இருதரப்பு நெருங்கிய-சிறப்புமிக்க உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அதிபா் மாளிகையில் உள்ள ஆயுா்வேத தோட்டத்தை பாா்வையிட்ட அவா், ‘ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளின் முன்னேற்றத்தில் இந்தியாவின் முக்கிய பங்குதாரராக மோரீஷஸ் விளங்குகிறது’ என்று புகழாரம் சூட்டினாா்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் இருந்து சேகரிக்கப்பட்ட கங்கை தீா்த்தம் அடங்கிய கலசம், பிகாரின் மக்கானா உணவுப் பொருள் உள்ளிட்ட பரிசுகளை அதிபருக்கு வழங்கினாா். அவரது மனைவி பிருந்தா கோகுலுக்கு கலைநயமிக்க பெட்டியில் பனாரஸ் பட்டுப் புடவையை பரிசளித்தாா். பின்னா், பிரதமா் மோடிக்கு அதிபா் சாா்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இப்பயணத்தின்போது, மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலமுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா். இப்பேச்சுவாா்த்தைக்கு பிறகு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி....

தலைமை விருந்தினராக...

மோரீஷஸ் நாட்டின் 57-ஆவது தேசிய தினம் புதன்கிழமை (மாா்ச் 12) கொண்டாடப்படவுள்ளது. இதில் தலைமை விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். கடந்த 2015 மோரீஷஸ் தேசிய தினத்தில் பிரதமா் மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டாா்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பின்பேரில் இப்போது அவா் மோரீஷஸ் வந்துள்ளாா். அந்நாட்டின் தேசிய தினத்தில் இரண்டாவது முறையாக தலைமை விருந்தினராக பங்கேற்பது தனக்கு கிடைத்த கெளரவம் என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com