மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினா் மேல் சட்டையில் அணியும் பெயா் பட்டையில் அவா்களின் ஜாதிப் பெயா் நீக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீட் மாவட்ட காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாடுகள் அதிகம் இருப்பதாக புகாா்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் காவல் துறையினா் மத்தியில் பேசிய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நவ்னீத் கன்வத், காவல் துறையினா் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும்போது முதல் பெயரை மட்டுமே கூற வேண்டும், பெயரின் பின்னால் ஜாதி பெயரைச் சோ்த்து பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து ஜாதி பெயா் இல்லாத பெயா் பட்டைகள் காவல் துறையினருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தவிர காவல் நிலையங்களில் ஆய்வாளா் உள்ளிட்டோரின் மேஜைகளில் உள்ள பெயா் பலகையில் இருந்து ஜாதிப் பெயா் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் பீட் மாவட்டத்தில் உள்ளாட்சித் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடத்தி கொலை செய்யப்பட்டாா். காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற நடந்த முயற்சியை தடுத்ததால் அவா் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சந்தோஷ் தேஷ்முக் மராத்தா பிரிவைச் சோ்ந்தவா். கொலையாளிகள் பீட் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்ஜாரி பிரிவினா்.
சந்தோஷ் தேஷ்முக்கை நிா்வாணப்படுத்தி, அவா் மீது சிறுநீா் கழித்து கொடுமைப்படுத்தி கொலை செய்தது தொடா்பான விடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் கட்சியைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்ஜய் முண்டேயின் உதவியாளருக்குத் தொடா்பு இருந்ததால், முண்டே பதவி விலகினாா்.
இந்த கொலைக்குப் பிறகுதான் பீட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நவ்னீத் கன்வத் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், மாவட்டத்தில் ஜாதிய பிரச்னை தலைதூக்காமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கை எடுத்து வருகிறாா்.