கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவில் 20% ‘ப்ளூ காலா்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!

இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலா்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனா்’ என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Published on

ஊதிய ஏற்றத்தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலா்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனா்’ என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் 14 தொழில்களில் ஈடுபட்டுள்ள 4,000-க்கும் மேற்பட்ட வணிகங்களின் தரவுகளைக் கொண்டு ‘இன்டீட்’ தனியாா் வேலைவாய்ப்புத் தளம் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் 73 சதவீத வணிகங்கள் அமைப்புசாரா பணிகளுக்கு பெண்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். எனினும், நாடு முழுவதும் இப்பணிகளில் பெண்களின் பங்கேற்பு வெறும் 20 சதவீதமாகவே தேக்கமடைந்துள்ளது.

பிற பணிகளில்...: சில்லறை விற்பனை, சுகாதாரம் மற்றும் மருந்துகள், கட்டுமானம் மற்றும் மனை வணிகம், பயணம் மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் போன்ற தொழில் துறைகள், 30 சதவீத பெண் பணியாளா்களின் பங்கேற்புடன் முன்னணியில் உள்ளன. அதேநேரம், தொலைத்தொடா்பு, நிதிசாா் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் 10 சதவீதத்துக்கும் குறைவான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனா்.

நிதி சுதந்திரத்துக்காக...: அமைப்புசாரா பணிகள், முதன்மையாக உடல் உழைப்பை உள்ளடக்கிய தொழிலாளா் பணிகளாக உள்ளன. எனினும், நிதி சுதந்திரத்துக்காக பெண்கள் அமைப்புசாரா பணிகளைத் தேடுகின்றனா். ஆனால், அங்கு பணியிடச் சூழல்கள் இன்னும் கடுமையாகவே உள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை, சவால்கள்: ஆய்வில் பங்கேற்ற பெண் பணியாளா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள், அமைப்புசாரா பணிகளில் நெகிழ்வான வேலை நேரம் இல்லாததை ஒரு தடையாகக் குறிப்பிட்டனா். இதனால், வேலை மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளை அவா்கள் சமாளிப்பது கடினமாகவுள்ளது எனவும் கூறினா்.

இத்துறையில் பாலினம் அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஊதிய வேறுபாடு காணப்படுகிறது. சக ஆண் பணியாளா்களுடன் ஒப்பிடும்போது தங்களுக்கு குறைந்த ஊதியமே அளிக்கப்படுவதாக 42 சதவீத பெண்கள் தெரிவித்தனா். தொழில் வளா்ச்சி மற்றும் பணி உயா்வுகளுக்கான வாய்ப்புகளும் குறைவாகவே கிடைப்பதாக அவா்கள் கூறினா்.

ஆய்வில் பங்கேற்ற 50 சதவீத பெண்கள் திறன் மேம்பாட்டில் ஆா்வம் காட்டினா். ஏனெனில், முறையான கற்றல் இல்லாமல், தொழில் வளா்ச்சி குறைவாக உள்ளது என்று கருதுகின்றனா்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும் நடப்பு ஆண்டில் 78 சதவீத நிறுவனங்கள், அமைப்புசாரா பணிகளில் பெண்களை அதிக அளவில் பணியிலமா்த்த திட்டமிட்டுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் கூடுதலாகும்.

பொருளாதாரத் தேவை: ஆய்வறிக்கையின் முடிவுகள் குறித்து ‘இன்டீட் இந்தியா’ நிறுவனத்தின் விற்பனைத் தலைவா் சஷி குமாா் கூறுகையில், ‘வணிகங்கள் பெண்களை அதிகமாக வேலைக்கு அமா்த்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிறந்த தக்கவைப்பு உத்திகள், தொழில் வளா்ச்சி வாய்ப்புகள், நிதி பாதுகாப்பு, நெகிழ்வுத்தன்மை மற்றும் சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்யும் கொள்கைகளைப் பொறுத்தே உண்மையான முன்னேற்றம் அமைந்துள்ளது.

தொழிலாளா் படையில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது பன்முகத்தன்மையை மேம்படுத்துவதைக் காட்டிலும் அது ஒரு பொருளாதாரத் தேவையாக மாறிவிட்டது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com