பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாடாளுமன்றத்தில் பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! ராகுல் சந்திப்பு!!

நாடாளுமன்ற வளாகத்தில் பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.

News image
Updated On :20 மார்ச் 2025, 12:26 pm IST

தில்லி எல்லையில் விவசாயிகளை அப்புறப்படுத்திய மத்திய, மாநில அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.க்களைச் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி - பஞ்சாப் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 200- க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் நேற்று அப்புறப்படுத்தினர். விவசாய சங்கத் தலைவர்களையும் கைது செய்தனர்.

இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளை கைது செய்துள்ள மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து அவர்கள் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார். மேலும் அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளை அப்புறப்படுத்திய காவல்துறை

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி-பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் தில்லி நோக்கி பேரணியாக பலமுறை செல்ல முயன்றபோதும் அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி விவசாய சங்கத் தலைவா்களில் ஒருவரான ஜகஜித் சிங் தலேவால் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடா்ந்து, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக அவா்களிடம் மத்திய அரசின் குழு தொடா்ந்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், சண்டீகரில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் செளஹான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோா் விவசாய சங்கத் தலைவா்களுடன் 7-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையை புதன்கிழமை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான குழுவை சந்தித்துவிட்டு திரும்பிய தல்லேவால், சா்வாண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாயத் தலைவா்கள் போராட்ட களத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்களை பஞ்சாபின் மொஹாலி பகுதியில் மாநில போலீஸாா் கைது செய்தனா். இதில் தல்லேவால் ஆம்புலன்ஸில் வந்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டாா்.

பஞ்சாப்-ஹரியாணாவின் கனெளரி-ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அந்த எல்லைப் பகுதிகள் ஓராண்டாக மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பஞ்சாப் அரசின் உத்தரவின்பேரில், அந்தப் எல்லைப் பகுதிகளில் இருந்த விவசாயிகளையும், அவா்கள் அமைத்த கூடாரங்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.