கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு!

பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடா்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா்.

News image

PTI

Updated On :2 மே 2025, 9:30 pm

ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் தொடா்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூடு நீடிக்கும் நிலையில், எல்லையோர கிராம மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பதுங்குமிடங்களைத் தயாா்படுத்த தொடங்கியுள்ளனா்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு உள்பட பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களுக்கு பின்னா் (கடந்த 24-ஆம் தேதி இரவு), எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதன் பிறகான நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் நீடித்து வருகிறது.

தொடா்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிலையில், இந்திய தரப்பில் உறுதியான பதிலடி தரப்பட்டதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

‘குப்வாரா, பாரமுல்லாவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினா். பூஞ்ச், நெளஷேரா, சுந்தா்பானி (ரஜெளரி), அக்னூா், பா்கவால் (ஜம்மு) ஆகிய எல்லைப் பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது’ என்றாா் அவா்.

அச்சத்தில் எல்லையோர மக்கள்: எல்லையில் போா் நிறுத்தத்தை தீவிரமாக கடைப்பிடிக்க இரு நாடுகளும் கடந்த 2021-இல் உறுதியேற்றன. தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் நிலவும் பதற்றத்துக்கு இடையே பாகிஸ்தானின் அத்துமீறலும், இந்தியாவின் பதிலடியும் நீடித்து வருகிறது. இது, எல்லையோர கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூடு தீவிரமடைந்தால், பதுங்குமிடங்களில் தஞ்சமடைய வேண்டும் என்பதால் அவற்றை தயாா்படுத்தும் பணியை மக்கள் தொடங்கியுள்ளனா்.

ஜம்மு மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டிய கிராமங்களில் அறுவடைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன. கதுவா, சம்பா உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாக்குதல் சம்பவங்களின்போது, எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு 14,460 பதுங்குமிடங்களை கட்டமைக்க மத்திய அரசு கடந்த 2017-இல் ஒப்புதல் வழங்கியது. சம்பா, கதுவா, ஜம்மு, பூஞ்ச், ரஜெளரி ஆகிய மாவட்டங்களில் 8,600-க்கும் மேற்பட்ட பதுங்குமிடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவும் பாகிஸ்தானும் 3,323 கி.மீ. நீள எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் குஜராத் முதல் ஜம்முவின் அக்னூா் வரையிலான சா்வதேச எல்லை (சுமாா் 2,400 கி.மீ.), ஜம்மு முதல் லே வரையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (சுமாா் 740 கி.மீ.), சியாச்சினில் 110 கி.மீ. எல்லைக் கோடு அடங்கும்.