உரிய ஒப்புதலுடன்தான் 
பாக். பெண்ணை திருமணம் செய்தேன்! - பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் விளக்கம்

உரிய ஒப்புதலுடன்தான் பாக். பெண்ணை திருமணம் செய்தேன்! - பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் விளக்கம்

பாகிஸ்தானைச் சோ்ந்த உறவுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றி பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் விளக்கம்.
Published on

‘பாகிஸ்தானைச் சோ்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்’ என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா் முனீா் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், தனக்கு எதிரான உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, சிஆா்பிஎஃப் ஆகியோருக்கு முனீா் அகமது வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக அரசு பிறப்பித்த உத்தரவின்படி பாகிஸ்தானியா்கள் பலா் இந்தியாவை விட்டு வெளியேறினா்.

இதனிடையே, ஜம்முவின் கரோத்ராவைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா் முனீா் அகமதை திருமணம் செய்து, கடந்த பிப்ரவரி முதல் கணவரின் குடும்பத்தினருடன் இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சோ்ந்த மினால் கான் சொந்த நாடு திரும்ப தயாரான செய்தி கூடுதல் கவனம் பெற்றது.

குறுகிய கால விசாவில் கடந்த பிப். 28-ஆம் தேதி இந்தியா வந்துள்ள மினால் கான், நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்துள்ளாா். இந்த விண்ணப்பம் நிலுவையில் இருப்பதால், அவரை நாடு கடந்த ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தடை விதித்தது. இதையடுத்து, மினால் கான் பாகிஸ்தான் திரும்பவில்லை.

சிஆா்பிஎஃப் வீரா் ஒருவா் பாகிஸ்தான் பெண்னை திருமணம் செய்தது சமூக ஊடகங்களில் விவாதத்தை எழுப்பியது. இத்திருமணத்தை மறைத்ததாகக் கூறி முனீா் அகமது படையிலிருந்து நீக்கப்பட்டாா். முனீா் அகமதின் செயல்கள் தேச பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சிஆா்பிஎஃப் கூறியது.

இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த முனீா் அகமது கூறுகையில், ‘எங்கள் திருமணம் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. 1947 பிரிவினையின்போது ஜம்முவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயா்ந்த எனது தாய்வழி மாமாவின் மகள்தான் மினால் கான். நாங்கள் இணையவழியில் பழகி காதலித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் கருத்துகள் பொய்யானவை.

படை விதிகளின்படி, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி தலைமையிடம் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒப்புதல் பெற்றேன். எனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், நுழைவு இசைவுக்காக காத்திருக்காமல் இணையவழியில் எனது திருமணம் மே மாதம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்த மனைவியுடன் விடுமுறையைக் கழித்துவிட்டு, பணிமாறுதலில் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள 41-ஆவது படைப்பிரிவில் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி சோ்ந்தேன். பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தது தொடா்பாக அங்குள்ள அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன்.

இந்நிலையில், என்னை படையிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com