ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தொடங்கித் தொடர் செய்திகள்...
இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்ட இடம்.
இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்ட இடம்.PTI

இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழுச் சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

எந்தெந்த இடங்களில் தாக்குதல்?

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)

  • மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)

  • மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

  • ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)

  • சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)

  • மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)

  • மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)

  • சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)

  • மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

மோடி வாழ்த்து

’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைத் தளபதிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

விமான சேவை பாதிப்பு

இந்திய ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு வரும் விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. ஸ்ரீநகர் உள்பட சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நண்பகல் வரை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

வெளியுறவு செயலர் விளக்கம்

  • பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது.

  • பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பஹல்காம் தாக்குதல் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தியுள்ளது.

  • தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனாலே, இந்தியா திருப்பி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பயங்கரவாதிகளின் வாழிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது.

விடியோ ஆதாரம் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை இந்திய ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்திய விமானப் படையின் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட விடியோக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது ராணுவத்துடன், நமது தேசத்திற்காக தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு - காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, சம்பா, கதுவா, ரஜௌரி, பூஞ்ச் ஆகிய ​​இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா வாழ்த்து

நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்றும், பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பெண் அதிகாரிகள் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

பாகிஸ்தான் மக்கள் தாக்கப்படவில்லை

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த சாதாரண மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்று இந்திய ராணுவ அதிகாரி சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.

ராயல் சல்யூட்!

”இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

இந்தியா தகுந்த பதிலடி!

நாம் யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட வேண்டும் என்றே விரும்புகிறோம் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை இந்தியா கொடுத்துள்ளது என்றும் பாகிஸ்தான் தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?

ஏற்கனவே 2016 அதிரடித் தாக்குதல், 2019 பாலாகோட் விமானப்படைத் தாக்குதல்கள் ஒன்றுபோல நடத்தப்பட்டிருந்தாலும் இதிலிருந்து சிந்தூர் மாறுபட்டது என்கிறார்கள்.

பாலாகோட் தாக்குதலின்போது ஒரே ஒரு பயங்கரவாத முகாம் தான் இலக்கு. சிந்தூர் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள். பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய முகாம் - பாகிஸ்தான் உள் பகுதிகளிலும் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீர் பகுதிகளிலும் தாக்குதல் சிந்தூர் தாக்குதலில் அதிநவீன துல்லியமன வெடிபொருள்களும், முகாம்களை கண்டறியும் டிரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாலாகோட் தாக்குதல், விமானப் படையால் மட்டும் நடத்தப்பட்டது.

மிக அபாயகரமான இரண்டு பகுதிகளில் இந்திய ராணுவம் எல்லையைக் கடந்துசென்று, பாகிஸ்தானின் இதயம்போன்ற பகுதிகளில் சிந்தூர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இது 2019 தாக்குதலைக் காட்டிலும் மிகப்பெரியது.

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அவ்விடத்தைவிட்டுச் செல்ல வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அதேபோல, இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்றும் பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்தூர் எனப் பெயரிட்டது ஏன்?

பொதுவாக தாக்குதல் நடத்தப்பட்ட இடம் அல்லது அது தொடர்பான பெயர்களுடன் இந்த அதிடிரத் தாக்குதல் அடையாளப்படுத்தப்படும். ஆனால், இந்த தாக்குதலுக்கு பெண்கள் நெற்றியில் இடும் சிந்தூர் என்ற திலகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறதாம். சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் என்பதால், பஹல்காம் தாக்குதலில், தங்களது கண் முன்னே கணவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த, இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களின் குங்குமத்துக்கு பதில் சொல்லும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், அதனால்தான் சிந்தூர் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் - மோடி சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.

மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி

இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.

மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றோரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உறுப்பினர்கள் 4 பேர் பலியாகினர்.

முதல்வர்களுடன் ஆலோசனை

எல்லையோர மாநிலங்களின் முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், சிக்கிம், மேற்குவங்க மாநில முதல்வர்களும் லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

விமான சேவைகள் ரத்து!

வடமேற்கு மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய உள்நாட்டு விமான சேவைகளை மே 10 ஆம் தேதி காலை 5.29 வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டீகர், தர்மசாலா, பிகானேர், ஜோத்பூர், குவாலியர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் 165 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வான்வழித் தடம் மூடல்!

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் மொத்த வான்வழித் தடமும் 48 மணிநேரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 மணி நேரத்துக்கு பின் வான்வழித் தடம் மீண்டும் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முழு ஆதரவு - ராகுல் காந்தி

இந்திய படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் அவசர கூட்டத்தை கூட்டிய காங்கிரஸ் கட்சி, எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாதுகாப்புப் படைகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் முப்படைகளுக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?

இந்திய விமானப் படையின் 5 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்தியை இந்திய அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போர் விமானங்கள், ஒரு மிக் - 21, ஒரு எஸ்.யூ. 30 மற்றும் ஒரு டிரோன் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன.

பாகிஸ்தான் ஆதாரவாளர்களால் பகிரப்படும் புகைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விபத்துக்குள்ளான மிக் - 21 விமானத்தின் படம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போர்ப் பாதுகாப்பு ஒத்திகை

நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்! 

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத் மற்றும் லாகூர் ஆகிய பகுதிகளின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

பயங்கரவாதத்தின் முடிவுக்கான தொடக்கமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்க வேண்டும்

''எனது கணவரும் பாதுகாப்புப் படையின் இருந்தார். அப்பாவி மக்களைக் காப்பதற்கும், அமைதியை நிலைநாட்டச் செய்யவும் அவர் விரும்பினார். வெறுப்புணர்வும், பயங்கரவாதமும் நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு பணியாற்றினார். அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், இத்துடன் இதனை முடித்துக்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையையும் அரசுக்கு முன்வைக்கிறேன். நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்க வேண்டும்''

- பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி கருத்து!

தில்லியில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தில்லிக்கு வரவிருந்த 65 விமானங்கள் மற்றும் புறப்பட வேண்டிய 66 விமானங்களும் இன்று (மே 7) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அமெரிக்க விமானம் உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்தும் ரத்தாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: சரியான பதிலடி - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் 

இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதனால் தலைநகர் தில்லி முழுவதுமே இருளில் மூழ்கியிருந்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், நாடு முழுவதும் இன்று மாலை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றது.

இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

வியாழக்கிழமை(மே 8) அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அப்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அனைத்து தலைவர்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் ஆட்டத்தின் நடுவே வெடிகுண்டு மிரட்டல்!

கொல்கத்தாவில் புதன்கிழமை(மே 7) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்ற ஈடன் கார்டன்ஸ் விளையாட்டுத் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் உயிரிழப்பு 31-ஆக உயர்வு

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை துல்லியமாகக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் 'ஆபரேசன் சிந்தூர்’ பெயரில் நடத்திய அதிரடி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. 46 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் புதன்கிழமை(மே 7) அதிகாலை நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களில் இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீரமரணம் அடைந்தார். இந்த தகவலை வியாழக்கிழமை(மே 8) இந்திய ரணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

5 ஃபீல்டு ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த தினேஷ் குமாரின் உயிர் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ள ராணுவம், அவரது குடும்பத்தாருடன் துணை நிற்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அவருடன் சேர்த்து, பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கும் இந்த தருணத்தில் ஆழ்ந்த இரங்கலை ராணுவம் தெரிவித்துள்ளது.

போதும்... நிறுத்திக்கொள்ளுங்கள்! - அமெரிக்கா வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் பழிக்குப்பழி நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டன. இனி, சண்டையை இருதரப்பும் நிறுத்திக் கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்பட்டாலும் அமெரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை(மே 8) தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையோரப் பகுதிகளில் உயிரிழப்பு 13-ஆக உயர்வு

பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகள் வீசி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், எல்லையோர பகுதிகளான பூஞ்ச், ரஜௌரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து அவர்களை பின்வாங்கச் செய்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குண்டுவீச்சு தாக்குதலிலிருந்து உயிரைக் காத்துக்கொள்ள எல்லையோர கிராம மக்கள் பலர் பதுங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியா-பாக். இடையே போர்ப் பதற்றம் விலக வலியுறுத்தல்

’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து அவர்களை பின்வாங்கச் செய்து வரும் நிலையில், இந்தியா-பாக். இடையே போர்ப் பதற்றம் விலக பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளன. அதற்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்பட்டாலும் துணை நிற்க தயார் என அந்நாட்டுத் தலைவர்கள் வியாழக்கிழமை(மே 8) தெரிவித்துள்ளனர்.

பீரங்கித் தாக்குதல்

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டாவது நாளாக புதன்கிழமை இரவும் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வீடுகளைக் குறிவைத்து கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றது.

லாகூரில் டிரோன் தாக்குதல்?

லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கோபால் நகர் மற்றும் நசீராபாத் சுற்றுப்புறங்களில் வெடிசப்தத்துடன் புகைமூட்டம் கிளம்பும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

லாகூரில் நடத்தப்பட்டிருப்பது டிரோன் தாக்குதலா? இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்டதா? என்ற செய்திகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக இருதரப்பில் இருந்தும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதமருடன் அஜித் தோவல் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது.

சற்றுநேரத்துக்கு முன்னதாக லாகூர் விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு இந்தியா இதுவரை பொறுப்பேற்கவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்து வருகின்றனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பஞ்சாபில் தாக்குதல்? 

பஞ்சாப் எல்லையில் அமிர்தசரஸ் - பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்- 15இ ஏவுகணை எனத் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலமாக ஏவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

100 பயங்கரவாதிகள் கொலை

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

முழு ஆதரவு

மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல், விவாதிக்க முடியாத சில விஷயங்கள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது என்றார்.

கொடியிறக்க நிகழ்வு: மக்களுக்குத் தடை

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி, ஹுசைனிவாலா மற்றும் சாத்கி ஆகிய சர்வதேச எல்லைகளில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வை பார்வையிட மறுஅறிவிப்பு வரும் வரை மக்களுக்கு தடை விதிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் வரலாறு...  இதையும் படிக்க..

அமெரிக்கர்களுக்கு உத்தரவு

லாகூர் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்துவதையடுத்து, அங்கிருந்து அமெரிக்கர்கள் வெளியேற பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறவும் அமெரிக்கர்கள் யாரும் அங்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத மோடி

எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக இன்று(மே 8) நடைபெற்ற 2-வது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும் இதர கட்சியினர் கலந்துகொண்டனர்.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புல்வாமா உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவராகவும் இருந்தார்.

பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ மரியாதை

பஹல்காம் தாக்குதல்கள்தான் இந்த பிரச்னைகளுக்கான துவக்கப்புள்ளி. பயங்கரவாதிகளைக் குறிவைத்துத்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச் சடங்கு நடந்துள்ளது. ஆனால், இந்தியாவால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதற்கான புகைப்படங்களையும் அவர் காட்டினார். இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை என பாகிஸ்தான் கூறியது பொய் என்பது நிரூபணமாகியிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பொற்கோவில் உள்பட 15 நகரங்கள் மீதான தாக்குதலை முறியடித்தது இந்திய ராணுவம்!

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையோரம் அமைந்துள்ள அமிருதசரஸ் பொற்கோவில் உள்பட 15 இந்திய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ஏவுகணைகள் நடுவானில் தாக்கி அழிப்பு! - கர்னல் சோபியா குரேஷி விளக்கம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பதிண்டா, சண்டீகர், நல், பலோடி, உத்தரலை மற்றும் பூஜ் உள்பட வடக்கு - மேற்கு இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயற்சித்தது.

இதனால், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன என இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்துள்ளார்.

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!

ஜம்முவில் பாகிஸ்தான் ராணும் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் உள்ளனர்.

ஜம்மு விமான நிலையத்தை தாக்க முயன்ற பாகிஸ்தானின் எஃப்-16-ஐ சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

ஜம்மு மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

உச்சபட்ச போர்ப் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவின் எல்லைப் புற மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தொலைபேசியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆக்ரா-தாஜ்மஹாலுக்கு பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு வலுவான பதிலடி: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு வலுவான பதிலடி கொடுத்துவருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இருளில் மூழ்கியது ஜம்மு - காஷ்மீர்

பாகிஸ்தான் உடனான போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதுமே இருளில் மூழ்கியுள்ளது.

அதிகாரிகளிடம் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்த அமித் ஷா!

எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.

இதேபோன்று மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை இயக்குநரிடமும் போர்ச் சூழல் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்.

பாகிஸ்தானில் 3 நகர்களின் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்! 

லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

பஞ்சாபின் பதான்கோட் அருகில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்துவதற்கான அவசியம் குறித்து எடுத்துரைத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் நீக்கம்?

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாகிஸ்தானின் 2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஜம்மு - காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 ட்ரோன்களை ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.

உரியில் மக்கள் இருப்பிடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்!

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லையோரப் பகுதியில் உள்ள உணவகம், விடுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கராச்சியில் இந்திய கடற்படை தாக்குதல்! 

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய ராணுவம், விமானப் படையைத் தொடர்ந்து தற்போது தற்போது கடற்படையும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

6 இடங்களில் முன்னேறிய இந்தியா

பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ராணுவம் நுழைந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் பாகிஸ்தானின் 2 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய நகரங்களில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது. கராச்சியிலும் இந்திய கடற்படையினர் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், அசாதாரண சுழல் நிலவுவதால் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்

பாகிஸ்தான் பிரதமருடன் அமெரிக்கா பேச்சு! 

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்புடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். மத்திய வெளியுறவு விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும் அவர் பேசியுள்ளார். இரு நாடுகளும் சண்டையிடாமல் அமைதி வழிக்கு திரும்ப அமெரிக்கா தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயல்பு நிலைக்குத் திரும்பியது தில்லி விமான நிலையம்! 

தில்லி விமான நிலையம் இயல்பு நிலையில் இயங்குவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாறிவரும் விமானப் பாதை, பாதுகாப்பு காரணங்களுக்காக சில விமானங்களின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விமானப் பயண நிலவரத்தை அறிந்துகொண்டு பயணிக்குமாறும் தில்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம்! - இண்டிகோ விமான நிறுவனம்

ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துகொள்ளலாம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல் தொடருகிறது...

ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாகிஸ்தானிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை (மே 8) இரவிலிருந்து தாக்குதல் நடத்தியது.

ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு விடியோ

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. அனைத்து தீய சக்திகளுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிறப்பு வந்தே பாரத்

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தர்மசாலா சென்றிருந்த கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பாக தில்லிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு வந்தே பாரத் ரயிலை மத்திய அரசு இயக்குகிறது.

கராச்சி துறைமுகம் தாக்குதல்

கராச்சி துறைமுகத்தை இந்திய போர்க் கப்பலான விக்ராந்த் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்திய கடற்படை தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பிஎஸ்எல் இடமாற்றம் 

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூர் மைதானங்களில் நடைபெறவிருக்கும் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் போட்டிக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு பேரணி 

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடல் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மக்களுக்கு அறிவுறுத்தல்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் மக்கள் அனைவரும் பதற்றமடையாமல் வீட்டுக்குள்ளேயே இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்ற அறிவிப்பு பல்வேறு எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊடுருவல் முறியடிப்பு 

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் மே 8 ஆம் தேதி இரவு 11 மணியளவில், பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

பெண் பலி

பாகிஸ்தானின் தாக்குதலில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த நர்கீஸ் பேகம் என்ற பெண் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் இருந்த மற்றொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சண்டீகரில் எச்சரிக்கை ஒலி

சண்டீகரில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிரிகளால் பேரிழப்பு!

எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் இருந்து கூடுதல் கடன் தேவைப்படுவதாக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர்கள் விடுமுறை ரத்து

போர்ச் சூழல் காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, உத்தரகண்ட் மாநில மருத்துவர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 12,000 படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் ஆலோசனை

எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து முப்படைத் தளபதிகளுடனும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

ஜம்மு - காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயற்சித்த 7 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவ முயற்சித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உதவி எண்கள் 

காஷ்மீர் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.

உதவி தேவைப்படும் மாணவர்கள் தொடர்பு/வாட்ஸ்அப் 75503 31902, இலவச எண் 80690 09901 மூலம் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் கையிருப்பு

போதுமான அளவுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐபிஎல் ஒத்திவைப்பு?

ஐபிஎல் 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்குச் சந்தை வீழ்ச்சி 

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.

பகல் 12.30 நிலவரப்படி சென்செக்ஸ் 816.59 புள்ளிகள் சரிந்து 79,518.22 ஆகவும், நிஃப்டி 254.80 புள்ளிகள் சரிந்து 24,019 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு 

தக் லைஃப் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், போர்ச் சூழல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், நிகழ்ச்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அதிகாரம் 

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 14 படைகளின் வீரர்களை எல்லைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு பணியாளர்களை சேர்க்கவும், நிதி ஒதுக்கீட்டுக்கான அதிகாரமும் பிப். 9, 2028 வரை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஒத்திவைப்பு

ஐபிஎல் 2025 தொடரின் மீதமுள்ள போட்டிகளை ஒரு வாரம் ஒத்திவைப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில், தேசத்துடன் பிசிசிஐ உறுதியாக நிற்பதாகவும், மத்திய அரசு, ஆயுதப் படைகள் மற்றும் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய நிலைகளை குறிவைத்த பாகிஸ்தான்

இந்திய நாட்டின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்து வருவதாக கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.

கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்

பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதி இந்திய கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தகவல்.

என்ன செய்யலாம், செய்யக்கூடாது

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

என்ன செய்யலாம்?

அதிகாரப்பூர்வ ஆலோசனைகள், உதவி எண்கள் மற்றும் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை மட்டும் பகிரவும்.

எந்தச் செய்தியையும் பகிர்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வப் பக்கத்தில் உண்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தவறாக தகவல்கள் கிடைக்கப்பெற்றால், புகாரளிக்கலாம்.

என்ன செய்யக்கூடாது?

நாட்டின் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை யாரும் வெளியிடவோ, வெளிப்படுத்தவோக் கூடாது.

உறுதி செய்யப்படாத தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.

வன்முறை அல்லது மதக் கலவரங்களைத் தூண்டும் தகவல்களை பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் மே 15 வரை பட்டாசுகள், ட்ரோன்களுக்குத் தடை

இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த மாதம் 15 ஆம் தேதி வரை எந்த விழாக்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்கவோ அல்லது ட்ரோன்களை பறக்கவிடவோ அனுமதிக்கப்படாது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் கட்ச் மாவட்டத் தலைநகா் புஜ் நகரையும் ட்ரோன் மூலம் தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. 

மீண்டும் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறதா இந்தியா? இன்றும் இருளில் மூழ்கிய நகரங்கள்!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மூன்றாவது நாளாக எல்லையோரப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்திவருகின்றன. இருள் சூழ்ந்த வானில் ஒளிப்புள்ளியாகத் தெரியும் ட்ரோன்களை இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் வீட்டருகே குண்டுவெடிப்பு சப்தங்கள்!

ஜம்மு - காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் இல்லத்துக்கு அருகில் இடைவிடாது குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

படிக்க | என் வீட்டருகே குண்டுவெடிப்பு சப்தங்கள்: முதல்வர் ஒமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பந்திபுரா மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பதுங்கு குழிகள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

படிக்க | ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

ஹிமாசலில் மின்தடை

போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக ஹிமாசல் மாநிலம் சோலனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று குஜராத், ஜம்மு - காஷ்மீரில் பெரும்பாலான மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்: பஞ்சாபில் 3 பேர் காயம்

பஞ்சாப் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர், அவந்திபோராவில் பாக்., ட்ரோன் தாக்குதல்

ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று அவந்திபோரா விமான தளத்தின் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹரியாணாவில் மின்சாரம் துண்டிப்பு!

பாகிஸ்தானின் டிரோன்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் ஹரியாணா மாநிலம் அம்பாலா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

படிக்க | பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!

பஞ்சாப்பில் மின்சாரம் துண்டிப்பு!

எல்லையோர மாநிலமான பஞ்சாப்பில், பாகிஸ்தானின் டிரோன்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தின் ஜலந்தர் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள்: ராணுவம்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபஸில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மெர், பூஜ், குவார்பெட், லாக்கி நாலா உள்ளிட்டப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் கண்டறியப்பட்டன.

படிக்க | எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம்

32 இந்திய விமான நிலையங்கள் மூடல்!

பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலுள்ள 32 விமான நிலையங்கள் மே.15 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க| மே 15 வரை 32 இந்திய விமான நிலையங்கள் மூடல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com