
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.
மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் மக்களின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி வடகிழக்கு மாநிலமான நாகாலாந்திலும் இந்த ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. நாகாலாந்தின் திமாப்பூர், கோஹிமா, மோகோக்சங், வோகா, ஜுன்ஹெபோட்டொ, மொன், பெக், தியொன்சங், கிபிரே, பெரன் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.
அம்மாநில தலைநகர் கோஹிமாவில், வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்கும் நோக்கில் அங்குள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தில் ஒத்திகைகள் நடைபெற்றன.
அப்போது, காயங்கள் ஏற்பட்டதைபோல் 10 பேர் சித்தரிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. இதற்காக அங்கு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டதுடன், ராணுவ மையமாக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்த ஒத்திகைகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, மருத்துவக் குழு, உள் பாதுகாப்புப் படை, என்.சி.சி. உறுப்பினர்கள் மற்றும் அசாம் ரைப்பிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று, அம்மாநிலத்தின் மற்ற 9 மாவட்டங்களின் தலைமை அலுவலகங்களிலும் மாலை 6.30 மணிக்கு மேல் வான்வழித் தாக்குதல்களின் போது செய்ய வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள், அபாய ஒலி எழுப்புதல் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் அடையச் செய்தல் போன்ற பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
மேலும், போர்க் காலத்தில் எவ்வாறு தீப்பற்றிய கட்டடங்களிலிருந்து தப்பிப்பது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது, சேதமடைந்த கட்டடங்களிலிருந்து காயமடைந்தவர்களை மீட்பது, மக்களை வெளியேற்றி பதுங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்பு மண்டலங்கள் ஆகியவற்றில் தங்கவைப்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.