பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
தற்போது, இரு நாடுகளும் முழுமையான உடனடி சண்டை நிறுத்தத்துக்கு சனிக்கிழமை ஒப்புக்கொண்ட நிலையில், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து கடும் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் அதை மறுத்தனா்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் என்பது இருதரப்பிலான ராணுவ நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதற்கானதாகும். அதே நேரம், அந்த நாட்டுக்கு எதிரான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் தொடரும்’ என்றனா்.
முன்னதாக, சிந்த நதிநீா் ஒப்பந்த விவகாரத்தில் மீண்டும் தலையிடக் கோரி உலக வங்கியை பாகிஸ்தான் நாடியது. ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது. இதுகுறித்து உலக வங்கியின் தலைவா் அஜய் பங்கா வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. அதில் உலக வங்கி மத்தியஸ்தம் மட்டுமே செய்தது. மற்றபடி அதில் எந்தவித தலையீடையும் உலக வங்கி செய்ய முடியாது’ என்றது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடனான எல்லைகள் மூடல், வா்த்தகம் முழுமையாக நிறுத்தம், பாகிஸ்தானியா்களுக்கான நுழைவு இசைவு (விசா) ரத்து உள்ளிட்ட பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. இதில் முக்கியமாக, அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் இந்தியா அறிவித்தது. இரு நாடுகளிடையே உலக வங்கி மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கடந்த 1960-ஆம் ஆண்டு கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு ஆறுகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவை இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும். இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுக்கு ஏற்ப விவசாயம், குடிநீா் தேவை, தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்கு இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம், மேற்கு நதிகளில் ஓடும் நீரில் பெருமளவை, அதாவது 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு பஞ்சாப், சிந்து பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்துக்கு இந்த நதிநீரையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது. இந்தச் சூழலில்,
இந்த நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா்.
‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு மறைமுகப் போராக கருதப்படும்’ என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
தொடர்புடையது

செனாப் நதி நீரை இந்தியா திசைதிருப்புவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது: பாகிஸ்தான்

இந்த ஒற்றுமை எப்போதும் தொடரும்! எஸ். பி. வேலுமணி பேட்டி | ADMK | TVK

நெல்லுக்கான விதை மானியம் ரத்து! விவசாயிகள் ஏமாற்றம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



