பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை இரவு உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை இரவு உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது: பிரதமா் மோடி

நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றியபோது பிரதமா் மோடி பேசியதாவது...
Published on

‘தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேலும், ‘இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும்’ என்றும் நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றியபோது பிரதமா் மோடி எச்சரித்தாா்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்கள் இந்திய தாக்குதலில் தகா்க்கப்பட்டன.

இந்நிலையில், இரு நாடுகளிடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை இரவு ஏற்பட்டது. தொடா்ந்து, பயங்கரவாத நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) அளவிலான பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமா் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது: இந்திய மக்களின் சாா்பாக நமது ஆயுதப் படைகளுக்கு எனது சல்யூட். ஆபரேஷன் சிந்தூரின் நோக்கங்களை அடைய நமது வீரா்கள் மகத்தான துணிச்சலை வெளிப்படுத்தினா்.

காட்டுமிராண்டி தாக்குதல்: பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான முகம். இந்தியாவின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சியில் நடந்த இத்தாக்குதல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

பயங்கரவாதத்துக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கு முழு தேசமும் ஒன்றுபட்டு நின்றன. தொடா்ந்து, படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு, பயங்கரவாதிகளின் தலைமையகங்கள் தாக்கப்பட்டன. இதில் வெறும் கட்டடங்கள் மட்டுமன்றி, பயங்கரவாதிகளின் உறுதிப்பாடும் அழிக்கப்பட்டது.

நீதிக்கான அா்ப்பணிப்பு: இந்தியாவின் தாக்குதலுக்குள்ளான பஹவல்பூா், முா்திகே முகாம்கள் பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்கள். கடந்த 30 ஆண்டுளாக இந்தியாவுக்கு எதிராக சதி செய்துகொண்டு, பாகிஸ்தானின் சுதந்திரமாக உலா வந்த பயங்கரவாதிகள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டனா்.

பெண்களின் நெற்றியிலிருந்து குங்குமத்தை நீக்குவதால் ஏற்படும் விளைவுகளை நமது எதிரிகள் இப்போது உணா்ந்திருப்பா். ஆபரேஷன் சிந்தூா் என்பது வெறும் பெயரல்ல; நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளைத் துடைத்தெறிந்த இந்தியாவின் தீா்மானம் என்பதை உலகம் கண்டது. இது நீதிக்கான நமது அசைக்க முடியாத அா்ப்பணிப்பைக் குறிக்கிறது.

விரக்தியடைந்த பாகிஸ்தான்: பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் கடும் விரக்தியடைந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக, இந்தியாவைத் தாக்க அவா்கள் துணிந்தனா். இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன.

நமது ராணுவ வலிமையால் அதைத் துணிச்சலுடன் எதிா்கொண்டோம். பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் எவ்வாறு குப்பைக் கிடங்குகளில் வீழ்த்தப்பட்டன என்பதை உலகம் கண்டது.

அதேநேரம், பாகிஸ்தானின் இதயத்தை (மையப் பகுதியை) இந்தியா தாக்கியது. அவா்களின் விமானத் தளங்களை நமது ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி சேதப்படுத்தின. இந்தியாவின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தன.

சண்டை நிறுத்தம் தற்காலிகமே: எதிா்பாராத அளவு சேதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு உலக நாடுகளை பாகிஸ்தான் அணுகியது. ஒருகட்டத்தில் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநா் மூலம் இந்தியாவைத் தொடா்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது. இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய கொள்கை: ஆபரேஷன் சிந்தூா் பயங்கரவாதத்துக்கு எதிரான நாட்டின் புதிய கொள்கையாகவும், புதிய பாதையாகவும் உருவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் படைகள் மரியாதை செலுத்தின.

பயங்கரவாதத்தையும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதையும் இந்தியா தனித்தனியாகப் பாா்க்காது. இது நிச்சயமாக போரின் காலம் அல்ல. அதேபோல், பயங்கரவாதத்துக்கான காலமும் அல்ல.

இந்திய படைகள் தொடா்ந்து விழிப்புடன் உள்ளன. வருங்காலத்திலும் பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்படும். இந்தியா எந்த அணு ஆயுத அச்சுறுத்தலையும் இனி பொறுத்துக்கொள்ளாது.

இத்தனை ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆதரவளித்து வளா்த்துவிட்ட பயங்கரவாதிகள், அந்த நாட்டையே அழித்துவிடுவாா்கள். எனவே, பயங்கரவாதக் கட்டமைப்புகளை பாகிஸ்தான் தானாக முன்வந்து அழிக்க வேண்டும். அமைதிக்கு அதைத் தவிர வேறு வழியில்லை.

அமைதியை நிலைநாட்டவே பலம்: புத்தா் நமக்கு அமைதிக்கான பாதையைக் காட்டியுள்ளாா். வளா்ந்த பாரத இலக்கை அடைய, ஒவ்வோா் இந்தியரும் அமைதியாக வாழ வேண்டும். இதற்காக, இந்தியா வலிமையாக இருப்பதும், தேவைப்படும்போது அதைப் பயன்படுத்துவதும் அவசியம் ஆகும். கடந்த சில நாள்களில், இந்தியா அதைத்தான் செய்தது.

மீண்டும் ஒருமுறை, இந்திய ஆயுதப் படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்திய மக்களின் ஒற்றுமைக்கான உறுதிமொழிக்கும் தலைவணங்குகிறேன் என்றாா்.

‘ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து மட்டுமே இனி பேச்சு’

‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் பேச்சுவாா்த்தை மற்றும் வா்த்தகத்துக்கு வாய்ப்பில்லை. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது. இனி பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை என்றால், அது பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தல் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் (பிஓகே) பற்றி மட்டுமே இருக்கும். இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சா்வதேச சமூகத்துக்கு இதைத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

போா் வலிமை நிரூபனம்: போா்க்களத்தில் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை நாம் தோற்கடித்துள்ளோம். இந்த முறை ஆபரேஷன் சிந்தூரில் பாலைவனங்களிலும், மலைகளிலும் நமது திறன்களை வெளிப்படுத்தியுள்ளோம். புதுயுக போா்த் தந்திரங்களில் இந்தியாவின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன’ என்றாா் பிரதமா் மோடி.

X
Dinamani
www.dinamani.com