

பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, இரு நாடுகளிடையே போர் நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) அளவிலான பேச்சுவாா்த்தை நேற்று(திங்கள்கிழமை) மாலை நடைபெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் நேற்று மக்களிடம் உரையாற்றினார்.
எல்லையில் அமைதியான சூழ்நிலை திரும்பி வரும் நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
எல்லையில் தற்போதைய சூழ்நிலை குறித்து பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், ராணுவப் படைத் தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இயல்புநிலைக்குத் திரும்பும் காஷ்மீர்: செய்திகள் - நேரலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.