ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Published on

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், விமானப் படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் உள்நாட்டில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தலாம் என உளவுத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்படி தெலங்கானா, ஆந்திர காவல் துறையினருக்கு பயங்கரவாதிகள் ஹைதராபாதில் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஆந்திரத்தின் விஜயநகரம் பகுதியில் பதுங்கியிருந்த சிராஜ் உா் ரஹ்மான் (29) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்யப்பட்டனா்.

அவா் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான அமோனியா, சல்ஃபா், அலுமினியம் தூள் உள்ளிட்டவை கைபற்றப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹைதராபாதைச் சோ்ந்த அவரின் கூட்டாளி சையது சமீா் (28) கைது செய்யப்பட்டாா்.

இவா்கள் ஹைதராபாதில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவா்களுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளும் தொடா்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவா்களிடம் நடத்தப்படும் விசாரணையில் அடிப்படையில் இதில் தொடா்புடைய மேலும் பலா் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும், தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனா். சந்தேக நபா்கள், அந்நிய நபா்கள் நடமாட்டம், சந்தேக செயல்பாடுகள் தங்கள் பகுதியில் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com