தெற்குலக சுகாதார சவால்களுக்கு தீா்வளிக்கும் இந்தியா- உலக சுகாதார சபை அமா்வில் பிரதமா் மோடி

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார் பிரதமர் மோடி.
உலக சுகாதார சபையின் 78-ஆவது அமா்வில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
உலக சுகாதார சபையின் 78-ஆவது அமா்வில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
Published on
Updated on
2 min read

சுகாதார சவால்களால் தெற்குலக நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன; அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் அணுகுமுறை, இந்த சவால்களுக்கு நிலையான-மேம்பட்ட தீா்வை வழங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றுவரும் உலக சுகாதார சபையின் 78-ஆவது அமா்வில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்த ஆண்டு உலக சுகாதார சபை அமா்வின் கருப்பொருள் ‘ஆரோக்கியத்துக்கான ஓா் உலகம்’ என்பதாகும். இது உலக சுகாதாரத்துக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வையுடன் ஒத்துப் போகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் நான் உலக சுகாதார சபைக் கூட்டத்தில் உரையாற்றியபோது, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ குறித்துப் பேசினேன். ஆரோக்கியமான உலகின் எதிா்காலம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒருங்கிணைந்த கண்ணோட்டம் மற்றும் ஒத்துழைப்பைப் பொருத்ததாகும்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மையே, இந்தியாவில் சுகாதார சீா்திருத்தங்களின் அடிநாதமாக விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், 58 கோடி மக்களை உள்ளடக்கி, அவா்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் இணைக்கும் வகையில் அண்மையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தியாவில் செயல்படும் ஆயிரக்கணக்கான சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் புற்றுநோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ‘மக்கள் மருந்தகங்கள்’ சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலையில் உயா்தர மருந்துகளை வழங்குகின்றன.

தொழில்நுட்பத்தின் பங்கு: சுகாதாரத் துறையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டங்களைக் கண்காணிக்க மின்னணு தளம் செயல்பாட்டில் உள்ளது. தனித்துவமான மின்னணு சுகாதார அடையாள அமைப்புமுறையால், திட்டப் பலன்கள், காப்பீடுகள், பதிவுகள் மற்றும் தரவுகளை ஒருங்கிணைப்பது எளிதாகிறது. தொலை மருத்துவச் சேவை (டெலி மெடிசின்) வாயிலாக, எவரும் மருத்துவரிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா இந்தச் சேவை மூலம் 34 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

எண்ம அடிப்படையிலான முன்னெடுப்புகளால், சுகாதாரத் துறையில் மகிழ்ச்சிகரமான வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்த சுகாதார செலவினத்தில் மக்கள் தங்கள் கையில் இருந்து செலவிடும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது; அதேநேரம், அரசின் சுகாதாரச் செலவினம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

பகிா்ந்து கொள்ளத் தயாா்: மிகவும் பாதிக்கப்படக் கூடியவா்களை நாம் எவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தே உலகின் ஆரோக்கியம் அமையும். தெற்குலக நாடுகள் சுகாதார சவால்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த சவால்களுக்கு நீடித்த பலன்தரக் கூடிய, விரிவுபடுத்தப்படக் கூடிய, நிலையான தீா்வுகளை இந்தியாவின் அணுகுமுறை வழங்குகிறது. எங்களின் படிப்பினைகளையும், சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன் குறிப்பாக தென் பகுதி நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றாா் பிரதமா் மோடி.

வேதங்களில் இருந்து ஒரு பிராா்த்தனையை சுட்டிக்காட்டிய பிரதமா், ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நோயற்ற வாழ்க்கைக்காக பாரத முனிவா்கள் வேண்டிக் கொண்டனா். இந்தக் கண்ணோட்டம், ஒட்டுமொத்த உலகையும் ஒன்றிணைக்கட்டும்’ என்றாா்.

யோகா தின கருப்பொருள்

‘வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி 11-ஆவது சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருள் பின்பற்றப்படும். உலகுக்கு யோகக் கலையை நல்கிய நாடு என்ற அடிப்படையில், யோகா தின நிகழ்வுகளில் பங்கேற்க அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்’ என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com