
புது தில்லி: நாட்டில் வக்ஃப் அமைப்பு என்ற பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.
பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பது கொடூரமானது மட்டுமல்ல, அரசமைப்புக்கும் எதிரானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்க அனுபவம் மிக்கவர்கள் தேவையென மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் அதனைச் செய்யலாம். வக்ஃப் வாரியத்துக்கு இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோரை நியமிப்பது நிர்வாக ரீதியிலான முடிவாகும். புதிய வக்ஃப் சட்டத்தில் அரசமைப்பு சட்ட மீறல் எதுவும் இல்லை. வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கபில் சிபல் வாதம்..
வக்ஃப் என்பது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதிட்டார். அதற்கு, மற்ற மதங்களில் என்ன என்று கபில் சிபலிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, பிற மதங்களில் தொண்டு செய்கின்றனர், இங்கு கடவுளுக்கு அர்ப்பணிப்பு செய்யப்படுகிறது. ஒரு முறை கொடுத்துவிட்டால் அதனை திரும்பப் பெற முடியாது என கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.
தொடர்ந்து, வக்ஃப் என்பது ஈகையின் ஒரு பகுதி, அதன் அவசியம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வழக்குரைஞர் ராஜீவ் தவான் கூறினார். மேலும், இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று வக்ஃப், அதில் கட்டுப்பாடு விதிப்பது மத உரிமையில் தலையிடுவது ஆகும் என்றும் வாதிட்டார்.
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தானமாக, நன்கொடையாக அளித்த, அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு, வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதில் முக்கியமாக 5 மனுக்களைத் தெரிவு செய்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 3 நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.