உதகை தாவரவியல் பூங்காவில் பழங்குடியினரின் அருங்காட்சியகம்
உதகை தாவரவியல் பூங்காவில் பழங்குடியினரின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் தாவரவியல் பூங்காவின் நுழைவுவாயில் புதுப்பிக்கப்பட்டு, அங்கு பழங்குடியினா் வாழ்வியல் முறை குறித்த புகைப்பட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயா் காலத்திலான பழமையான பாரம்பரிய கட்டடத்தில் தாவரவியல் பூங்கா குறித்த சிறப்பம்சங்கள், பழங்குடியினா் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை அமைத்து, மாவட்டத்திலுள்ள பழங்குடியினா் குறித்து அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

