

மெட்ரோ டிக்கெட் பதிவு செய்தல் முதல் ஜெமினி ஏஐ வரையிலான கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் தொடர்பான அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் தனது கூகுள் மேப் செயலி மேம்படுத்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அடுத்த நாளே இந்தியாவில் உள்ள கூகுள் மேப் பயனாளர்களுக்கான 10 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் முதல்முறையாக கூகுள் மேப்ஸின் புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், செய்யறிவு இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் பதிவு உள்ளிட்டவைகளும் உள்ளன.
தனித்துவமான சிறப்பம்சமாக கைகளால் தொடாமலேயே இயக்கக்கூடிய வகையில் ஜெமினி செய்யறிவு உதவியுடன் வழிகளைப் பெறுதல், செய்யறிவு குரல் ஒரு கோ-பைலட் போலவும் செயல்படுகிறது.
ஜெமினி செய்யறிவுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால், மொபைல் போனை தொடாமலேயே எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து தேடலாம்.
உதாரணமாக, “விலை அதிகமில்லாத அருகில் உள்ள ஒரு நல்ல உணவகத்தைக் கண்டுபிடித்துக் கொடு, அதனுடன் பார்க்கிங் வசதியும் வேண்டும்...” எனக் கூறினால் ஜெமினி செய்யறிவுடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் மேப்ஸில் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதோடு நின்றுவிடவில்லை. மின்சார வாகன பயனாளர்கள் சார்ஜிங் இடங்களைப் பற்றியும் கேட்டுக்கொள்ளலாம்.
கடந்தாண்டு தொடங்கப்பட்ட ‘இஸ்பிரேஷன்’ என்ற அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்களின் பயணத்தில் சிறந்த சுற்றுலாத் தலங்கள், உணவங்கள் குறிந்த பரிந்துரைகளையும் வழங்குகிறது.
பயனர் மதிப்பீடுகள் (using reviews), புகைப்படங்கள், பொதுத் தகவல்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கும் கூகுள் மேப்ஸால் பதிலளிக்க முடியும்.
கூகுள் மேப்ஸில் போக்குவரத்து நுண்ணறிவு தொடர்பாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு, தில்லி, மும்பை போன்ற பெரு நகர்களில் போக்குவரத்து நெரிசல், இடையூறுகள் உள்ளிட்டவற்றையும் முன்பே கணித்துக் கூறும் அம்சங்களும் உள்ளன.
அரசாங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள், சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்கள் மற்றும் நொய்டா, குருகிராம், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகர்களின் நெடுஞ்சாலைகளில் உள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவிகளின் இடங்களையும் கூகுள் மேப்ஸால் கூறமுடியும்.
தில்லி, பெங்களூரு, கொச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள மெட்ரோவில் செல்லக்கூடிய பயணிகள் இப்போது கூகுல் மேப்ஸ் மூலம் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த செயல்முறை விரைவில் மும்பையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிக்கலான மேம்பாலங்களில் செல்வது தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதனையும் தொடுதல் இன்றி குரல் மூலம் பயன்படுத்தமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.