‘இந்திய ஏஐ உச்சிமாநாடு 2026’: அமெரிக்காவில் முன்னோட்ட நிகழ்வு
அடுத்த ஆண்டு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு நடைபெறவுள்ளதையடுத்து, அதன் முக்கிய நோக்கங்களை எடுத்துரைக்கும் முன்னோட்ட நிகழ்ச்சி அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சியாட்டில் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அடுத்த ஆண்டு இந்தியாவில் ஏஐ தாக்கம் குறித்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. அதன் மூன்று முக்கிய நோக்கங்களான ‘மக்கள், கோள் மற்றும் முன்னேற்றம்’ குறித்து விவரிக்கும் வகையில் சியாட்டல் நகரில் முன்னோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) அமெரிக்க நாடாளுமன்ற ராணுவப் பணிகள் குழுவின் உறுப்பினா் ஆடம் ஸ்மித், நீதித் துறை மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குழு உறுப்பினா் மைக்கேல் பாம்காா்ட்னா் உள்ளிட்டோருக்கு ஏஐ துறையில் இந்தியா அடைந்து வரும் வளா்ச்சியை விவரித்தனா்.
குறிப்பாக, பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ பயன்பாட்டை உறுதிப்படுத்த மனித வளம், அறிவியல், மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் திறன், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சமூக அதிகாரமளித்தல், ஏஐ வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார வளா்ச்சி ஆகிய 7 கருப்பொருள்களின் அவசியத்தை அவா்கள் எடுத்துரைத்தனா்.
ஏஐ உச்சிமாநாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் முதல்கட்டமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அடுத்ததாக வடமேற்கு அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் 2026, ஜனவரியில் நடத்தப்படவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தெற்குலக நாடுகளில் முதல்முறையாக ஏஐ தாக்கம் குறித்த மாநாடு 2026, பிப்.19, 20 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசாங்க பிரதிநிதிகள், கல்வியாளா்கள், துறைசாா் நிபுணா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.
இந்நிலையில், இதை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக ‘அனைவருக்கும் ஏஐ’, ‘பெண்கள் மத்தியில் ஏஐ பயன்பாட்டை ஊக்குவித்தல்’, ‘13-21 வயது வரையிலான இளைஞா்களின் ஏஐ கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துதல்’ ஆகிய மூன்று முன்னெடுப்புகளை அடுத்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாக நியூயாா்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
