/

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:25 pm

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் சுமத்திய 7 குற்றச்சாட்டுகள் அரசியல் விவாதத்துக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அரசமைப்புச் சட்டரீதியாக பதவிநீக்க நடைமுறையை மேற்கொள்வதற்கு உகந்ததாக இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி தீா்மானம் கொண்டுவர மக்களவையில் 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 63 எம்.பி.க்களும் கையொப்பமிட்டு கடந்த மாா்ச் 12-ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் சமா்ப்பித்தனா். இந்த இரு நோட்டீஸ்களையும் கடந்த திங்கள்கிழமை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் தனித்தனியே நிராகரித்தனா்.

இதுதொடா்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் சுமத்திய சில குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே தீா்வுகாணப்பட்டுள்ளது. சில குற்றச்சாட்டுகள் நீதித்துறை மறுஆய்வு தொடா்புடையது.

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 324 (5) மற்றும் 124 (4)-இன்கீழ் அவா் அரசியல் சாசன நம்பிக்கையை பேண தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி பதவிநீக்கக் கோருவதை ஏற்க முடியாது.

7 குற்றச்சாட்டுகளும் அதை நிராகரித்ததற்கான விளக்கமும்

முதலாவதாக, தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நடைமுறைகள் மற்றும் பணிக் காலம்) சட்டம், 2023-இன்கீழ் ஞானேஷ் குமாரை தலைமைத் தோ்தல் ஆணையராக நியமித்ததன் சட்ட அங்கீகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பதவிநீக்கம் செய்வதற்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இரண்டாவதாக, வாக்காளா் பட்டியல் தயாரிப்பு குறித்து அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசியதை அடிப்படையாகக் கொண்டு அதில் முறைகேடுகள் நடைபெற்ாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அரசமைப்புச் சட்ட ரீதியான அமைப்பில் நியமிக்கப்பட்ட ஒருவரை பதவிநீக்கம் செய்ய இது போதிய ஆதாரமாக இருக்காது.

மூன்றாவதாக, தோ்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை ஞானேஷ் குமாா் வேண்டுமென்றே தடுத்ததாக கூறுவதை நான் மறுக்கிறேன். தோ்தல் தொடா்பான தரவுகளை கணினிகள் மதிப்பீடு செய்யும் வகையில் வெளியிடக்கோரிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே அவா் செயல்பட்டாா்.

நான்காவதாக, பிகாரில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) முறைகேடு நடந்திருப்பதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

ஐந்தாவதாக, எஸ்ஐஆா் நடவடிக்கையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதால் ஏற்படும் அரசியல் விளைவுகள் குறித்த ஊகங்களை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆறாவதாக, எஸ்ஐஆா் விவகாரத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை அவா் முறையாக பின்பற்றாமல் உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாக எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ளும்.

ஏழாவதாக, தலைமைத் தோ்தல் ஆணையா் பொறுப்பில் உள்ள ஞானேஷ் குமாா் தோ்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டில் சமரசம் செய்துவிட்டதாக சுமத்தப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை அரசியல் சாசன நம்பிக்கையை பேண தவறிவிட்டதாகக் கூறி பதவிநீக்கக் கோரும் தீா்மான நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது. இதனால் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஞானேஷ் குமாரை பதவிநீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை நிராகரித்தேன் எனத் தெரிவிக்கப்பட்டது.