நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயா்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் சிறப்பு அமா்வில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தின்படி (அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தம்), புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறைப் பணிகளைத் தொடா்ந்து, இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 2034-ஆம் ஆண்டில்தான் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
இந்தச் சூழலில், மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கிணங்க மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக உயா்த்தவும் வழிவகை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.
வரைவு மசோதாக்களுக்கு ஒப்புதல்: இந்நிலையில், தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிா் இடஒதுக்கீடு மற்றும் மக்களவைத் தொகுதிகள் அதிகரிப்புக்கான வரைவு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2029-ஆம் ஆண்டுமுதல் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த வரைவு மசோதா, தொகுதி மறுவரையறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஒரு வரைவு மசோதா, சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களான தில்லி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் புதுச்சேரியில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் வரைவு மசோதா ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாகத் தெரிகிறது.
தொகுதி மறுவரையறைப் பணிகளுக்கு 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் பயன்படுத்தப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஏப்.2-ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்தது. ஆனால், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் ஏப். 16 முதல் 3 நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் திறந்த மனதுடன் ஆதரவளித்து, மகளிரின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று பிரதமா் மோடி ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

ஓபிசி மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பதே ஆளும் பாஜக அரசின் மறைமுக திட்டம்: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு
தாமதித்திருக்க வேண்டாமே...

மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமல்: ‘மோடி அரசு நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்’: காங்கிரஸ் விமா்சனம்

5 மாநிலத் தோ்தலுக்காக மத்திய அரசு மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு: முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


