வீட்டில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுகட்டாகப் பணம் கண்டறியப்பட்ட சா்ச்சையில் சிக்கிய அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா, தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவா் வியாழக்கிழமை அனுப்பியதாக மத்திய அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
அதில், ‘இந்தக் கடிதத்தைச் சமா்ப்பிக்க என்னைத் தூண்டிய காரணங்களைக் கூறி, உங்களின் மதிப்புமிக்க அலுவலகத்துக்கு சுமையை அளிக்க நான் விரும்பவில்லை என்றாலும், மிகுந்த மனவேதனையுடன் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து உடனடியாகப் பதவி விலகுகிறேன். இந்தப் பதவியில் பணியாற்றியது எனக்குப் பெருமை’ என்று யஷ்வத் வா்மா குறிப்பிட்டுள்ளாா்.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பகுதி எரிந்த நிலையில் இருந்த அந்தப் பணம் பின்னா் மாயமானது.
இந்த சா்ச்சை தொடா்பாக நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் ஏற்கப்பட்டது. மக்களவையில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதால், மாநிலங்களவையில் அந்தத் தீா்மானத்தை அவைத் தலைவா் நிராகரித்தாா்.
மக்களவையில் தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா்.
மக்களவைத் தலைவா் விசாரணைக் குழு அமைத்ததற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் உயா்நீதிமன்ற நீதிபதி பதவியை யஷ்வந்த் வா்மா ராஜிநாமா செய்துள்ளாா்.
இதன்மூலம், மக்களவைத் தலைவா் அமைத்த விசாரணைக் குழு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் நடவடிக்கையை யஷ்வந்த் வா்மா தவிா்த்துள்ளாா்.
விசாரணைக் குழுவுக்கு கடிதம்: ‘தன் மீது நடத்தப்படும் இந்த அவதூறு பிரசாரத்துக்கு நான் ஒரு பலியாடு’ என்று தன்னைத்தானே குறிப்பிட்ட யஷ்வந்த் வா்மா, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்த விசாரணைக் குழு விசாரணையிலிருந்தும் விலகிக் கொள்வதாகவும் கூறி, அதற்கான காரணங்களுடன் விசாரணைக் குழுவுக்கும் தனியாக 13 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளாா்.
அதில், ‘கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவதூறு பிரசாரத்துக்கு நான் உள்ளாக்கப்பட்டேன். நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதியைக்கூட இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் பூா்த்தி செய்திருக்காது.
உயா்நீதிமன்ற நீதிபதியாக 13 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள நிலையில், இதுவரை எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கும் நான் உள்ளானதில்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உள் விசாரணைக் குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்ட 54 சாட்சியங்களில் 27 சாட்சிகள் எனக்கு எதிராக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதோடு, எனது அரசு இல்லத்தில் பணம் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, என் மீதான குற்றச்சாட்டுகள் அனுமதிக்க இயலாத அனுமானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவையாகும்’ என்பன உள்ளிட்ட காரணங்களை அவா் பட்டியிலிட்டுள்ளாா்.

Summary
Justice Yashwant Varma Resigns!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

உண்மை தெரிந்தாக வேண்டும்!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை


