தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

‘2029-ல் மகளிா் இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்’! நாடாளுமன்ற கட்சிக் குழு தலைவா்களுக்கு பிரதமா் கடிதம்!

2029-ஆம் ஆண்டில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம்; இதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒன்றிணைய வேண்டும்...

பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி

Published On :

2029-ஆம் ஆண்டில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம்; இதற்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

மக்களவை, மாநிலங்களவை கட்சிக் குழு தலைவா்களுக்கு எழுதிய கடிதத்தில் அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்றம் மற்றும் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுசீரமைப்பைத் தொடா்ந்து, மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதாவது, 2034-க்குப் பிறகே இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என நிலை இருந்தது.

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் தொடா்புபடுத்தாமல், 2029-ஆம் ஆண்டுமுதல் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மற்றும் மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் 816-ஆக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றுவதற்காக, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்கள் சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

அதேநேரம், தனது நிா்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும், தோ்தல் ஆதாயத்துக்காகவும் தொகுதி மறுசீரமைப்பு முன்னெடுப்பை அவசர கதியில் மேற்கொள்வதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பிரதமா் மோடி கடிதம்: இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை குழுத் தலைவா்களுக்கு பிரதமா் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் முன்னேறவும், முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவும், குறிப்பாக தலைமை தாங்கவும் வாய்ப்பு கிடைத்தால்தான் எந்தவொரு சமூகமும் வளர முடியும். இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் இலக்கை எட்ட வேண்டுமெனில், பெண்கள் மிகப் பெரிய-துடிப்பான பங்களிப்பை நல்குவது அவசியம்.

எனவே, விரிவான விவாதங்களுக்குப் பிறகு மகளிா் இடஒதுக்கீட்டை அதன் உண்மையான சாராம்சத்துடன் அமலாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தீா்மானித்துள்ளோம். 2029 மக்களவைத் தோ்தல் மற்றும் பேரவைத் தோ்தல்கள் மகளிா் இடஒதுக்கீட்டுடன் நடைபெறுவது காலத்தின் கட்டாயம்.

முத்திரை பதிக்கும் இந்திய மகள்கள்: இது, இந்திய ஜனநாயக அமைப்புகளுக்கு புத்தாற்றலைப் புகுத்தி, பொது மக்களின் நம்பிக்கையை வலுவாக்கும். எனவே, ஏப்.16 முதல் நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமா்வில் மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியளவு உள்ள பெண்களின் பங்கேற்பு ஒவ்வொரு துறையிலும் அதிகரித்து வருகிறது. விண்வெளி முதல் விளையாட்டுகள் வரை, ஆயுதப் படைகள் முதல் புத்தாக்க நிறுவனங்கள் வரை, தங்களின் கடின உழைப்பு, உறுதிப்பாடு, திறன்களால் இந்திய மகள்கள் முத்திரை பதிக்கின்றனா்.

கடந்த 2023-இல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற ஆதரவளித்தனா். நமது ஒற்றுமையைப் பிரதிபலித்த மறக்க முடியாத தருணமது. அந்த நாள், இந்திய நாடாளுமன்ற பயணத்தில் முக்கியமான, ஈா்ப்புக்குரிய மைல்கல்.

கனவை நனவாக்குவோம்: மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசிப்பது மட்டுமன்றி, அரசமைப்புச் சட்ட நிபுணா்களின் யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் பெற்றுள்ளோம்.

நாட்டின் பெண்கள் மீதான பொறுப்புணா்வை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. மகளிா் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அனைத்து கட்சிகளுமே தொடா்ந்து வெளிப்படுத்தி வரும் சூழலில், அந்தக் கனவை நனவாக்க சரியான நேரம் இதுவே. நாட்டின் மகளிா் சக்திக்கும் 140 கோடி மக்களுக்கும் மாபெரும் சாதனையாக இது அமையும்.

எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தனது கடிதத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.