தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத 69% இடஒதுக்கீட்டை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு சாதாரண அரசியல் திட்டமல்ல; அது சமூகநீதி, சமத்துவம், பின்தங்கிய மக்களின் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் சமூக அமைப்பின் பிரதிபலிப்பாகும். இந்த இடஒதுக்கீடு முறையை எந்த காரணத்திற்காகவும் பலவீனப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது நீதிமன்ற வழிகளில் பாதிக்கவோ அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மொத்த மக்கள் தொகை 85 முதல் 90 சதவீதம் வரை இருப்பதாக பல்வேறு ஆணையங்கள் மற்றும் சமூக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அந்த அடிப்படையில் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காகவே 69% இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டு சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த இடஒதுக்கீடு தொடர்பாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த கணக்கிடத்தக்க தரவுகள் (Quantifiable Data), சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூகநீதிக்கும் இணையானவை ஆகும்.
69% இடஒதுக்கீட்டின் தற்போதைய பங்கீடு:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 26.5%
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 3.5%
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20%
பட்டியல் இனத்தவர் - 18%
பட்டியல் பழங்குடியினர் - 1%
இந்த சட்டம் 1993 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம், இந்த இடஒதுக்கீடு சட்டத்திற்கு தனித்துவமான அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது.
உச்சநீதிமன்றம் 50% உச்சவரம்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தாலும், மாநிலங்களின் தனிப்பட்ட சமூகச் சூழல், மக்கள்தொகை அமைப்பு மற்றும் பின்தங்கிய நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு அதற்கு விதிவிலக்குகள் வழங்கப்பட முடியும் என்பதும் சட்டரீதியான உண்மையாகும். தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக அமைப்பே 69% இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துகிறது.
எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்குகளிலும் வலுவான சட்ட வாதங்களுடன் ஆஜராகி, மாநிலத்தின் உரிமையையும் சமூகநீதியையும் பாதுகாக்க வேண்டும். தேவையான அனைத்து தரவுகள், ஆணைய அறிக்கைகள், சமூக புள்ளிவிவரங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட ஆதாரங்களை முழுமையாக சமர்ப்பித்து 69% இடஒதுக்கீட்டை நிலைநிறுத்துவதற்கான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், 69% இடஒதுக்கீடு குறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சமூகநீதியை ஆதரித்து கருத்து வெளியிடப்பட்டிருப்பதும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் 69 சதவீத இடஒதுக்கீடை தக்க வைக்க உரிய சட்ட தரவுகளை சமர்ப்பிக்க எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கது. சமூகநீதி என்பது எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமான கொள்கையல்ல; அது தமிழ்நாட்டின் அடையாளம்.
தமிழக மக்களின் உரிமையான 69% இடஒதுக்கீட்டை எந்தவிதத்திலும் பறிக்க முயற்சிகள் நடைபெறாதவாறு தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். "69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" என்ற தெளிவான கொள்கையுடன் அரசு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சமூகநீதியை காக்கவும், பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் 69% இடஒதுக்கீடு நிரந்தரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Summary
Regarding Ramadoss's insistence on safeguarding the 69% reservation policy currently in force in Tamil Nadu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீா் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பழம்பெரும் கோயில்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்: காமாட்சிபுரி ஆதீனம் வேண்டுகோள்








