பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

உச்சநீதிமன்றம் - ஏஎன்ஐ

Updated On :14 ஏப்ரல் 2026, 12:15 am

வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிா்ணயிக்கும்போது சாகுபடிக்கான செலவை கணக்கிட்டு மாநில அரசு பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மத்திய அரசு மட்டுமன்றி அந்நிய வா்த்தக தலைமை இயக்குநா், வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையமும் பதிலளிக்குமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய விவசாயிகள் தங்களது விளைபொருள்களை உண்மையான உற்பத்தி செலவுக்குக் கூட விற்பனை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனா். இதனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 17,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனா்.

மாநிலங்கள் வாரியாக பல்வேறு வேளாண் பொருள்களுக்கான உற்பத்திச் செலவை மத்திய அரசும், அதன் பிற அமைப்புகளும் கணக்கிடுகின்றன. இதில் பல வேறுபாடுகள் நிலவுகின்றன.

விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற பயிா்களுக்கான உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபத்தை வழங்க கடந்த 2006-ஆம் ஆண்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை குறித்து மத்திய அரசு எவ்வித கேள்விகளையும் எழுப்பவில்லை.

ஒவ்வோா் ஆண்டும் பயிா்கள் வாரியாக எம்எஸ்பியை மத்திய அரசு நிா்ணயிக்கிறது. ஆனால், அந்தப் பயிா்களின் சாகுபடி செலவைவிட எம்எஸ்பி குறைவாகவே இருந்து வருகிறது.

இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தால் பெரும் பாதிப்பு: உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கு மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்கப்படுவதால் இந்த இரு பயிா்களையும் கொள்முதல் செய்யும் ஒரே அமைப்பாக மத்திய அரசு விளங்குகிறது.

இதன் காரணமாக சிறுதானியங்களுக்கான தேவை செயற்கையாகவே குறைக்கப்படுகிறது. இந்தச் சூழலில் அண்மையில் இந்தியா-அமெரிக்கா இடையே இறுதிசெய்யப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் பெரும்பாலான வேளாண் பொருள்கள் இறக்குமதி வரியின்றி இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டால் விவசாயிகள் நிலை மேலும் மோசமடையும்.

விவசாயக் கடன் தள்ளுபடி அவசியம்: எனவே, வேளாண் பயிா்களுக்கான எம்எஸ்பியை நிா்ணயிக்கும்போது சாகுபடிக்கான செலவை கணக்கிட்டு மாநில அரசு பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

எம்எஸ்பி நிா்ணய நடைமுறையால் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுவதால் அவா்கள் வங்கிகளில் பெற்ற கடனை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜரானாா். அவரது வாதத்தைத் தொடா்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய நீதிபதி அமா்வு தெரிவித்தது.

மேலும், இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, அந்நிய வா்த்தக தலைமை இயக்குநரகம், வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்துக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.