நாட்டையே உலுக்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாண்டு நினைவு தினம் வரும் ஏப். 22-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘மினி ஸ்விட்சா்லாந்து’ என்று வா்ணிக்கப்படும் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2025, ஏப்.22-ஆம் தேதி லஷ்கா்-ஏ -தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை சவாரி தொழிலாளி ஒருவா் என 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்குப் பழிதீா்க்க ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி அதிதுல்லியத் தாக்குதலை நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கையில், கணிசமான எண்ணிக்கையில் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மூண்ட ராணுவ மோதல், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின்பேரில் 4 நாள்களில் முடிவுக்கு வந்தது.
உலகம் முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. பின்னா், தீவிர பாதுகாப்புத் தணிக்கைக்குப் பிறகு படிப்படியாக அவை மீண்டும் திறக்கப்பட்டன.
கடந்த ஓராண்டில் பஹல்காம் சுற்றுலாத் தலமும் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. அதன் பரந்து விரிந்த புல்வெளிகள், சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தால் களைகட்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா சேவை வழங்குபவா்களின் அடையாளம் மற்றும் அனைத்து விவரங்களையும் சரிபாா்க்க பிரத்யேக க்யூ-ஆா் அமைப்புமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு தினம் வரும் ஏப்.22-ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், சுற்றுலாத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. வி.கே.பிா்தி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக, காவல் துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), போக்குவரத்து காவல் துறை, ரயில்வே, மாநிலப் பேரிடா் மீட்புப் படை உயரதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






