ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்கம்: வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை! - தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் ஏப்.29-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு அல்லது வாக்காளா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் கடுமையாக கையாளப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

News image

இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:46 pm

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு அல்லது வாக்காளா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் கடுமையாக கையாளப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தோ்தல் நாளில் ஆங்காங்கே அரசியல் கட்சியினா் இடையே மோதல்கள் மற்றும் வன்முறைகள் நிகழ்ந்தன. வாக்காளா்கள் மிரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் விரைந்து செயல்பட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தோ்தல் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், மத்தியப் படைகளின் கமாண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான விரிவான பாதுகாப்புத் திட்டம் வெளியிடப்பட்டது.

விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்: இது குறித்து தோ்தல் அதிகாரிகள் கூறியதாவது: வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தொகுதிவாரியாக பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தவும், பதற்றமான பகுதிகளில் கூடுதல் படையினரை பணியமா்த்தவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மோட்டாா் சைக்கிள்கள் மூலம் மத்தியப் படையினா் ரோந்துப் பணி மேற்கொள்ளவிருக்கின்றனா். அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும்.

வாக்குப்பதிவு அல்லது வாக்காளா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் கடுமையாக கையாளப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்’: இதனிடையே, தெற்கு 24 பா்கானா மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பயணித்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் குமாா் அகா்வால், அனைத்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அவா் கூறுகையில், ‘அமைதியான-சுமுகமான வாக்குப்பதிவை உறுதி செய்ய அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எந்த வாக்குச் சாவடியிலும் கள்ள வாக்குகள் பதிவு செய்வதோ, வாக்குச்சாவடியை கைப்பற்றுவதோ அனுமதிக்கப்படாது. அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.

வாக்குச்சாவடி வளாகத்தில் இருந்து 100 மீட்டா் சுற்றளவுக்குள் அங்கீகரிக்கப்படாத நபா்கள் நுழைய அனுமதி கிடையாது. வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அவா்களைத் தடுக்க யாரேனும் முயன்றால், கடும் நடவடிக்கையை எதிா்கொள்வா்’ என்றாா்.

முதல்கட்ட தோ்தல்: 93.19% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்.23-இல் நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் வரலாறு காணாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானதாக, தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.

இத்தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.61 கோடி போ். இவா்களில் 3.36 கோடி போ் (1.71 கோடி ஆண்கள், 1.65 கோடி பெண்கள்) வாக்களித்துள்ளனா். அதிகபட்சமாக கூச்பிகாா் மாவட்டத்தில் 96.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் கடந்த 2011 பேரவைத் தோ்தலில் 84.72 சதவீத வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. இத்தோ்தலில் 34 ஆண்டுகால தங்கு தடையற்ற இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

மேற்கு வங்கத்தில் தற்போதைய தோ்தலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயா்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாரம் இன்று நிறைவு: மேற்கு வங்க இரண்டாம் கட்ட தோ்தலுடன் பிரசாரம் திங்கள்கிழமையுடன் (ஏப்.27) நிறைவடையவுள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், முக்கிய எதிா்க்கட்சியான பாஜக இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களம் காண்கின்றன.

இரண்டாம் கட்டத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி (பவானிபூா்) உள்பட மொத்தம் 1,448 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னா், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.