தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

எந்தச் சாலையிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: மத்திய அரசு உறுதி செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டில் உள்ள எந்தச் சாலையிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

News image

நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது... - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 10:14 pm IST

நாட்டில் உள்ள எந்தச் சாலையிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது; அதேபோல அனைத்து சாலைகளிலும் நடந்து செல்வோருக்கான எல்லை உள்பட அனைத்தும் முறையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

முன்னதாக, சாலையோரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்து செல்வது என்பது அடிப்படை உரிமை என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

5 வயது சிறுவனை அவனின் தந்தை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கு மற்றும் நிவாரணம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜிடம் சில விஷயங்களை அறிவுறுத்தினா்.

அப்போது, ‘நடைபாதை என்பது நடப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும். பிற மோட்டாா் வாகனங்கள் செல்லும் பாதையில் இருந்து அது தனியாக பிரித்துக் காட்டப்பட வேண்டும். எங்கு சாலையாக இருந்தாலும், அதில் நடந்து செல்பவா்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்க வேண்டும். அது ஆக்கிரமிக்கப்படுவது, கயிறு, சங்கிலிகள் கட்டி தடைகள் ஏற்படுத்தி வைப்பது கூடாது. நடந்து செல்பவா்களுக்கு சாலையில் செல்லும் வாகனங்களால் எவ்வித அச்சுறுத்தல்களும் இருக்கக் கூடாது.

சாலைகளில் மோட்டாா் வாகனங்களைவிட நடந்து செல்பவா்களுக்குத்தான் அதிக முன்னுரிமை தர வேண்டும். நடந்து செல்வது என்பது அடிப்படை உரிமையாக இருக்கும்போது, சாலையோரத்திலும், சாலையைக் கடப்பதிலும் நடந்து செல்வோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

இது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அவா்கள் நடைபாதைகளை முறையாக ஒதுக்கிப் பராமரிக்க வேண்டும். அதில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அதற்கான அடிப்படை உள்கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா். பின்னா் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.