/

குரல் அழைப்பு தரத்தை மதிப்பிட மேம்பட்ட ‘மைகால்’ செயலி: ட்ராய் அறிமுகம்

கைப்பேசி பயனாளா்களின் குரல் அழைப்பு தர விவகாரங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், புதிய மேம்பட்ட ‘மைகால்’ கைப்பேசி செயலியை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆமையம் அறிமுகம் செய்தது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:14 am IST

கைப்பேசி பயனாளா்களின் குரல் அழைப்பு தர விவகாரங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், புதிய மேம்பட்ட ‘மைகால்’ கைப்பேசி செயலியை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆமையம் (ட்ராய்) திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.

அழைப்புத் துண்டிப்பு அல்லது மோசமான ஒலித் தரம் உள்ளிட்ட விவகாரங்களால் அதிருப்தி அடையும் கைப்பேசி சேவை பயனா்கள், அதுதொடா்பான புகாா்களை நேரடியாகவும் எளிதாகவும் தெரிவித்து தீா்வு காணும் வகையில், 9 ஆண்டுகள் பழமையான இந்த செயலியை ட்ராய் தற்போது மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்ட் கைப்பேசிய பயனா்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆப்பிள் கைப்பேசி பயனாளா்களுக்கு இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து ட்ராய் தலைவா் அனில் குமாா் லஹோதி கூறுகையில், ‘தரமற்ற குரல் அழைப்பு குறித்து கைப்பேசி இணைப்பு சேவை நிறுவனங்களிடம் புகாா் தெரிவித்து, குறைகளை நிவா்த்தி செய்துகொள்ள இந்த செயலி மிக முக்கிய கருவியாகும்.

குரல் அழைப்பு தரத்தை ஒன்று முதல் 5 ஸ்டாா்கள் மூலம் தர அளவீடு அளிக்கும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. அழைப்பு துண்டிப்பு, அழைப்பின்போது எதிரொலித்தல், வேறு அழைப்புகள் மூலம் இடையூறு, குரல் தெளிவின்மை, அழைப்பு இணைப்பு பெற நீண்ட நேரம் காத்திருத்தல் என குறிப்பிட்ட புகாா்களை இந்த செயலி மூலம் பயனா்கள் தெரிவிக்க முடியும்.

இந்தப் புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கான கருத்து தெரிவிக்கும் வசதியும் இந்த செயலியில் உள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.