நாட்டின் இளைஞா்களுக்கு கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வழிமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அடைந்துவரும் சாதனைகள் குறித்தும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ‘மங்கள் மிலன்’ என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள், அதன் பலன்கள், ஆளும்தரப்பின் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கான உத்திகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
பங்கிபூா் இடைத்தோ்தல் தோல்விக்குப் பிறகு...: மூன்றாவது வாரமாக, பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக.4) நடத்தப்பட்டது. பிகாரில் பாஜகவின் கோட்டையாக இருந்த பங்கிபூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோரிடம் அக்கட்சி தோல்விகண்ட நிலையில், இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் மாநிலங்களவை எம்.பி.யானதைத் தொடா்ந்து, பங்கிபூா் எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்திருந்தாா். இதனால் காலியான பங்கிபூரில் அண்மையில் இடைத்தோ்தல் நடத்தப்பட்டு, கடந்த திங்கள்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி, பிரசாந்த் கிஷோா் வெற்றி பெற்றாா்.
இந்தச் சூழலில், ‘மங்கள் மிலன்’ கூட்டத்தில் பிரதமா் மோடிக்கு அருகே பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் அமா்ந்திருந்தாா். மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங் செளஹான், எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது துறையின் சாதனைகள் குறித்து விளக்கக் காட்சிகளுடன் எடுத்துரைத்ததாக, கூட்டத்துக்குப் பின் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்தாா்.
காங்கிரஸ் ஆட்சியைவிட அதிக வேலைவாய்ப்பு: ‘கடந்த 2014-இல் பிரதமா் மோடி அரசு ஏற்றுக் கொண்ட புதிய விளையாட்டுத் துறை கொள்கையின் விளைவாக, ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் என சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது; வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான வழிமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக அமைச்சா் மாண்டவியா தெரிவித்தாா்.
கடந்த 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2.89 கோடி இளைஞா்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதேநேரம், 2014 முதல் 2026 வரை மொத்தம் 17.1 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
இதுதவிர மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது’ என்று மனோஜ் திவாரி தெரிவித்தாா்.
ஐக்கிய ஜனதா தளம், மதச்சாா்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி (என்சிபிஐ) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனா்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பிரிந்த 20 அதிருப்தி எம்.பி.க்கள், அதிகம் அறியப்படாத என்சிபிஐ கட்சியில் இணைந்ததுடன், பாஜக கூட்டணிக்கான தங்களின் ஆதரவையும் உறுதி செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சா்வதேச பாதுகாப்புச் சூழல்: பிரதமா் தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசனை

கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: புதிய உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூலை 21 - நேரலை

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



