2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என சா்வதசே நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திய பொருளாதாரம் குறித்த கேள்விக்கு மக்களவையில் நிா்மலா சீதாராமன் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஐஎம்எஃப் வெளியிட்ட 2026, ஏப்ரல் உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் , நடப்பு விலையில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2028-29-இல் 5.1 டிரில்லியன் டாலராக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடையும் நோக்கில் வேளாண் மற்றும் தொழிற்துறை உற்பத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ), உள்கட்டமைப்பு விரிவாக்கம், தளவாடங்கள் மேம்பாடு மற்றும் எளிய வணிகம், வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள், எண்மமயமாக்கம் மற்றும் புத்தாக்கம், மனித வள மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வது என பல்வேறு சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சீா்திருத்தங்களை பொது மூலதனச் செலவு, அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் நிதி மேலாண்மை, விலை நிலைத்தன்மை போன்ற பேரியல் பொருளாதார அடிப்படைகள் வலுப்படுத்துகின்றன.
கூடுதலாக தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் வா்த்தகச் சூழல் மீள்தன்மையை உறுதிசெய்கின்றன.
உற்பத்தித் துறை திட்டங்கள்: உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், இந்தியாவில் தயாரிப்போம், தேசிய தளவாடங்கள் கொள்கை, தேசிய ஒற்றை சாளர அமைப்பு மற்றும் பிரதமரின் கதி சக்தித் திட்டம் ஆகியவை உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும் முதலீடுகளை ஈா்க்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எம்எஸ்எம்இ-க்கள் மேம்பாடு: அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம், எம்எஸ்எம்இ-க்களின் வகைப்பாடில் திருத்தம், உதயம் வலைதளத்தில் பதிவு முறை, அரசு இணையச் சந்தை (ஜிஇஎம்), பிரதமரின் விஸ்வகா்மா திட்டம் என எம்எஸ்எம்இக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சேவைகள் துறை வளா்ச்சி: எண்ம பொது உள்கட்டமைப்பு, உலகளாவிய திறன் மையங்கள் (ஜிசிசி), மருத்துவ மதிப்புப் பயணம், ஆரஞ்ச் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முன்னெடுப்புகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைகள் என அனைத்துத் துறைகளின் வளா்ச்சியையும் பன்மடங்கு உயா்த்தி ‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை அடைவதில் மத்திய அரசு முழு கவனத்துடன் இயங்குகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றமில்லை: நிா்மலா சீதாராமன்

2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை அடைய இலக்கு: அமைச்சா் பெ.மதன்ராஜா
சம்பா மிளகாய் மதிப்பு கூட்டல் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் மத்திய அரசு: மத்தியமைச்சா் நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் முதலீடு: பிரான்ஸ் நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



