தில்லி காவல்துறை அதிகாரிகள் போல நடித்து இணையவழி மோசடிக்காரர்கள் சுமார் ரூ. 1.43 கோடியை ஏமாற்றியதாக ஆந்திரப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) வித்யா சாகர் நாயுடு தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் பிரிவுகளின் கீழ் சுமார் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இது ஒரு டிஜிட்டல் மோசடி என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், குறிப்பாக முதியவர்கள் இத்தகைய மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் காவல்துறையை அணுகுவதற்குள் பெரும்பாலும் பணம் பறிபோய்விடுகிறது. இருப்பினும், நாங்கள் ஒவ்வொரு புகாரையும் பதிவு செய்து விசாரணை நடத்துகிறோம் என்று கூறினார்.
மச்சிலிப்பட்டினத்தின் பரஸ்பெட் பகுதியைச் சேர்ந்தவர் வி. அலிலு மங்கம்மா. ஜூன் 10 அன்று மோசடிக்காரர்கள் தன்னை தொடர்புகொண்டனர். தனது பெயரில் துன்புறுத்தல் செய்திகள் அனுப்பப்படுவதாகவும், தில்லி காவல் நிலையத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தில்லி காவல்துறை அதிகாரிகள் போல நடித்தவர்கள், பணமோசடி வழக்கு ஒன்றில் தன்னை பொய்யாகச் சிக்கவைத்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி இந்தியாவின் தலைமை நீதிபதியின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தினர். மிரட்டல் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் ரூ. 1.43 கோடிக்கு அதிகமாகப் பணத்தை மாற்றச் செய்தனர்.
தில்லியில் உள்ள ஒரு கிளையில் தனது பெயரில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் பொதுத்துறை வங்கிக் கணக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தனக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக அவர்கள் மங்கம்மாவிடம் கூறினர். பணமோசடி வழக்கில் கோயல் என்ற நபர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையின்போது தனது பெயரிலான வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிவந்ததாகவும் மோசடிகாரர்கள் கூறினர். அந்த கணக்கு
மூலம் சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், "தேசிய ரகசிய வழக்கு" தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் மங்கம்மாவை "தலைமை நீதிபதி" முன்னிலையில் ஆஜர்படுத்தப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
"ராகுல் குப்தா" மற்றும் "நிஷா படேல்" என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், தாங்கள் விசாரணை அதிகாரிகள் என்று கூறி, அவரிடம் தனது அனைத்து சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். தடயவியல் சரிபார்ப்புக்காக தனது கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றுமாறும், சந்தேகம் நீங்கிய பிறகு மூன்று நாள்களுக்குள் அந்தப் பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
அவர்கள் கூறியதை நம்பிய மங்கம்மா, மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்த தனது நிலையான வைப்புத்தொகைகளை ரத்து செய்தார். பின்னர், அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்பட்டவை போன்ற தோற்றமளிக்கும் ஆவணங்களைப் பெற்ற பிறகு, மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கு ஆர்டிஜிஎஸ் மூலம் ரூ. 1.05 கோடியை மாற்றினார். அதேபோன்ற மேலும் சுமார் ரூ. 39 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் மூலம் மாற்றியதாகவும் மங்கம்மா கூறினார்.
பின்னர், ஜூலை மாதம் முழுவதும் மோசடி கும்பல் மங்கம்மாவைத் தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் ஜூலை 29 அன்று மீண்டும் அழைத்து, அவர் அறிவித்த முழுத் தொகையையும் மாற்றவில்லை என்றும், மேலும் ரூ. 95 லட்சத்தை மாற்றாவிட்டால் அவரது அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
தனது சொத்தை அடமானம் வைக்குமாறும், தங்கம், வெள்ளியை அடகு வைக்குமாறும் அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்குமாறும் "படேல்" தனக்கு அறிவுறுத்தியதாக மங்கம்மா கூறினார். உடனடியாக ரூ. 20 லட்சத்தையும், அடுத்த இரண்டு நாள்களில் மேலும் ரூ. 22 லட்சத்தையும், மாத இறுதிக்குள் மீதமுள்ள ரூ. 53 லட்சத்தையும் மாற்ற வேண்டும் என்று தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது வங்கிக் கணக்கில் உள்ள பணம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையது என்று முன்பே கூறப்பட்ட நிலையில், இப்போது கடன் வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனிடம் இது குறித்துத் தெரிவித்தார். அவரது ஆலோசனையின் பேரில், ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன் காவல்துறையை அணுகினார். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஐஎம்ஒ செயலி மூலம் தொடர்பு கொண்டதாகவும், உரையாடலின்போது அவர்கள் ஒருபோதும் விடியோவை ஆன் செய்யவில்லை என்று கூறினார்.
பஞ்சாயத்து ராஜ் துறையில் ஓய்வுபெற்ற கண்காணிப்புப் பொறியாளராக இருந்த தனது கணவர் வி. வேம்பதி கோபாலகிருஷ்ணாவையும் ஐஎம்ஓ செயலியை நிறுவுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் மோசடி கும்பல் என்று கண்டறிந்த நிலையில், இவ்விஷயத்தை வெளியே சொன்னால், தங்கள் மகனைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மாற்றிய பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள். அதற்குள் மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தைப் பல வங்கிக் கணக்குகள் வழியாக மாற்றிவிடுவதால், அதை மீட்பது மிகவும் கடினமாகிவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
A woman from Andhra Pradesh's Krishna district has claimed she has lost about Rs 1.43 crore to cyber fraudsters who posed as Delhi Police officials in a fabricated money laundering case, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் பெரம்பலூர் இளம்பெண்!

பங்குச் சந்தை முதலீட்டில் இரட்டிப்பு லாபம்: ஐடி ஊழியரிடம் ரூ. 1.66 கோடி மோசடி

சேவைக்குள் அடங்கும் வாழ்க்கை!
அதிரடியாக உயர்ந்த அரிசி விலை! கிலோவுக்கு ரூ. 15 அதிகம்! - விநியோகப் பற்றாக்குறை காரணமா?
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp




