பெரம்பலூர்: அரசுப் பணி வாய்ப்பைத் துறந்து ஏழை மாணவர்கள், விதவைப் பெண்கள் போன்றோரின் வாழ்வின் வெளிச்சமாக விளங்கி வருகிறார் பெரம்பலூர் பிரியா நடராஜன்.
பெரம்பலூர் மாவட்டம், பாடலூரைச் சேர்ந்தவர் பிரியா நடராஜன் (29). தனது எதிர்காலத்தைத் தானே மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் உறுதியுடன், உயர் கல்வியைத் தொடர்ந்து பயின்று அர்த்தமுள்ள வாழ்க்கையை உருவாக்க முடிவு செய்தார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரியா, எளியச் சூழலில் வளர்ந்தார். பள்ளி விடுமுறைகளில் குடும்ப வருமானத்திற்கு உதவுவதற்காக பெற்றோருடன் வயல்களில் பணிபுரிந்தார். பொருளாதார சிரமங்கள் இருந்தபோதிலும், கல்வியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
உயர்கல்வி நிறைவு
அதன்படி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபடியே, தொலைதூரக் கல்வி மூலம் பல முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பிரியா, போட்டித் தேர்வுகளுக்கு தயாரானார். அரசுப் பணி பெறும் தகுதியைப் பெற்றிருந்தும், அந்த வாய்ப்பைத் துறந்து ஏழை மாணவர்கள், விதவைகள், பெண் கல்வி மற்றும் அதிகாரமளிப்பு மூலம் தனது முன்னேற்றத்துக்கானப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், அவரது பெற்றோர் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துவைத்தனர். இருப்பினும், தனது இலக்குகளை அடைய வேண்டும் எனும் உறுதியுடன், தொலைதூரக் கல்வியில் சேர்ந்த அவர், தொடர்ந்து உயர்கல்வியை நிறைவு செய்தார்.

பிரியா நடராஜன்
விடா முயற்சி
பாரதிதாசன், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் எம்.ஏ., எம்.எட்., யோகாவில் முதுநிலை டிப்ளமோ மற்றும் கணினி பயன்பாடுகளில் முதுநிலை டிப்ளமோ ஆகியவற்றைப் பெற்றார். அதே வேளையில், அரசுப் பணி பெறும் நோக்கில் போட்டித் தேர்வுகளுக்கும் தயாரானார். தனது படிப்புச் செலவுகளைச் சமாளிப்பதற்காக தனியார் நிறுவனங்களிலும், பயிற்சி மையங்களிலும் பணியாற்றியபடி, குரூப்- 4 மற்றும் குரூப்-2 தேர்வுகளுக்குத் தயாரானார். அவரது விடாமுயற்சிக்கு பலனாக அரசு வேலைவாய்ப்பை பெற்ற நிலையிலும், அப் பணியில் சேரவில்லை.
கனவுகளை நனவாக்க
அரசுப் பணியில் சேர்ந்திருந்தால் தனது வாழ்க்கை மட்டுமே முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால், போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தால், ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை நனவாக்க முடியும் எனும் நோக்கில், பல தனியார் பயிற்சி மையங்களிலும், பல்வேறு ஐஏஎஸ் அகாதெமிகளிலும் பணியாற்றினார். அங்கு கற்பித்தல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் கல்வி நிர்வாகத்தின் மூலம் அனுபவத்தை பெற்றார். இந்த அனுபவமே சொந்தப் பயிற்சி மையத்தைத் தொடங்கும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
இலவச பயிற்சி
அதன் விளைவாக, 2022 டிசம்பரில் ஒளவையார் ஐஏஎஸ் அகாதெமி-ஐ நிறுவினார். தொடக்கத்தில் டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு, இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சிகள் அளித்தார்.
பெரும்பாலான பயிற்சி மையங்களைப் போல அல்லாமல், வித்தியாசமான முறையில் இந்த அகாதெமியை நடத்தி வருகிறார் பிரியா. தாய், தந்தையை இழந்தவர்கள், அல்லது யாரையாவது ஒருவரை இழந்தவர்களால் வளர்க்கப்பட்ட மாணவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கிறார்.
கட்டணச் சலுகை
விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீதக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. மற்றவர்களிடமிருந்து, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்காக ரூ. 5 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக கல்வி வீடியோக்கள், போட்டித் தேர்வு வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்கமளிக்கும் காணொளிகளை வெளியிட்டு, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
3 ஆயிரம் பேர் தேர்வு
73 மாணவர்களுடன் தொடங்கிய இந்த அகாதெமி, கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். இதில், சுமார் 3 ஆயிரம் பேர் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வாகி பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
நூலகத்துக்கு நிலம் நன்கொடை
பிரியாவின் சேவையானது பயிற்சி அளிப்பதோடு நிறைவடையவில்லை. கடந்த 2025 நவம்பரில் பாடலூர் பொது நூலகம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததையறிந்த அவர், புதிய நூலகம் அமைப்பதற்காக தனது சொந்த நிலத்தில் 2 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், 1 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக பதிவுசெய்யவும் உதவி செய்து, அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தார்.
100 மாணவர்கள் தத்தெடுப்பு
பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற வேண்டும் எனும் நோக்கில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 97 தையல் இயந்திரங்களை விதவைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அளித்துள்ளார். இதன்மூலம் பல பெண்கள் தையல் தொழிலைத் தொடங்கி, தங்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிலையான வருமானத்தை ஈட்டுகின்றனர்.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 பள்ளி மாணவர்களைத் தத்தெடுத்து, அவர்களது பள்ளிக் கட்டணம், சீருடை, புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்விச் செலவுகளையும் ஏற்று வருகிறார்.
இதுமட்டுமின்றி, தான் படித்த தனியார் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 2 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். கல்வி, சமூகச் சேவை மற்றும் மகளிர் முன்னேற்றத்துக்காக பிரியாவின் பங்களிப்பை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கியுள்ளன. ஆனால், தனது மாணவர்கள் வெற்றி பெறுவதே தனக்கு மிகப்பெரிய விருது என கூறுகிறார் பிரியா.
இதுகுறித்து பாடலூரைச் சேர்ந்த எஸ். சூர்யா கூறியது:
எனது கணவர் உயிரிழந்தப் பிறகு, 2 குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சிரமமாக இருந்தது. நிலையான வருமானம் இல்லாததால் பிரியாவிடம் உதவி கேட்டேன். முதலில் ஒரு தையல் இயந்திரம் கொடுத்து தையல் தொழிலைத் தொடங்க உதவினார். தொழில் வளர்ந்தபின் இன்னொரு தையல் இயந்திரத்தையும் வழங்கினார். இன்று என் குழந்தைகளை வளர்த்து, அவர்களைப் படிக்கவைத்து வருமானம் ஈட்டி வருகிறேன் என்றார் அவர்.
இதுகுறித்து பிரியா நடராஜன் கூறியது:
ஒரு மாணவர் தனக்கு அரசுப் பணி கிடைத்துவிட்டது என்று கைப்பேசியில் தொடர்புகொண்டு என்னிடம் தெரிவிக்கும் ஒவ்வொரு முறையும், அதிக மகிழ்ச்சி அடைகிறேன். அரசுப் பணி என்பது ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றுகிறது. அதுவே, தொடர்ந்து செயல்பட என்னை ஊக்குவிக்கிறது. பயிற்சிக் கட்டணம் அல்லது படிப்புக்குத் தேவையான பொருள்களை வாங்க முடியாததால் பல மாணவர்கள் தங்களது படிப்பைப் பாதியிலேயே கைவிடுகின்றனர். திருமணம் அல்லது பொருளாதாரச் சிக்கல்களால் பல பெண்கள் தங்களது கனவுகளை விட்டுவிடுகின்றனர். அந்தப் போராட்டங்களை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். சூழ்நிலைகள் மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதை என் அகாதெமி மூலம் நிரூபிக்க விரும்புகிறேன். கல்விக்கு வாழ்க்கையை மாற்றும் சக்தி உள்ளது. அது, அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார் பிரியா.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பது மட்டுமல்ல, அவளது அர்ப்பணிப்பும், ஊக்கமும், பல கடினமான உழைப்பும் மறைந்துள்ளன. அதேபோல், பிரியா போன்றோர் இளைஞர்களுக்கும், பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களை வாழ்வில் முன்னேற்றமடையச் செய்வது பெண் குலத்திற்கே பெருமை என்றால், அது மிகையாகாது.
Summary
The social work of Priya Natarajan from Padalur, Perambalur district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தைவான்- வருடாந்திர ராணுவப் பயிற்சி தொடக்கம்

'டீப் ஸ்டேட்' களமிறங்கி இருக்கிறதா?
மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!

பஞ்சாப் அரசுப் பள்ளிகளில் செய்யறிவு கல்வி அறிமுகம்! அமைச்சர் அறிவிப்பு
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |



