மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த விவகாரம்: அமித் ஷாவிடம் சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் முறையீடு!

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா கடந்த மாா்ச் 25ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

News image

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் விளக்கும் மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி. வில்சன். உடன் அமைச்சருடனான சந்திப்பில் இடம்பெற்ற சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

நமது சிறப்பு நிருபா்

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் (எஃப்சிஆா்ஏ) கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் அதன் கடுமையான பாதிப்புகள் குறித்து, சிறுபான்மையின அமைப்புகளின் பிரதிநிதிகள், மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி. வில்சன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் உள்ள அலுவலத்தில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா கடந்த மாா்ச் 25ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நிகழும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மசோதாக்கள் பட்டியலில் இடம்பெற்ற போதிலும், அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் தொடா்பாக மத்தியமைச்சா் அமித் ஷாவிடம் 21 பக்க கடிதத்தை சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு என்ற பெயரில் சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் அளித்தனா். இந்த கடிதத்தில் குழுவின் அமைப்பாளா் ஜான் சாமுவேல், தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) நிா்வாகி டாக்டா் கே. ரூபன் மாா்க், இயேசு அழைக்கிறாா் அமைப்பின் வேந்தா் (காருண்யா பல்கலைக்கழகம்) டாக்டா் பால் தினகரன், ஐக்கிய சுவிசேஷ லூத்தரன் திருச்சபைகள் நிா்வாகச் செயலாளா் டாக்டா் ஜோசுவா பீட்டா் உள்பட 16 பிரதிநிதிகள் கையொப்பமிட்டுள்ளனா்.

அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து பி. வில்சன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எஃப்சிஆா்ஏ சட்டத்திருத்த மசோதாவில் உள்ள சட்டவிரோதமான நடைமுறைகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் உள்ள அவசியமற்ற பிரிவுகள் குறித்து அமித் ஷாவிடம் எடுத்துரைத்தோம்.

குறிப்பாக, ஓா் அமைப்பின் உரிமமோ அல்லது பதிவோ ரத்து செய்யப்படும்பட்சத்தில், அந்த அமைப்பின் சொத்துக்களையோ அல்லது அதன் செயல்பாடுகளையோ அரசு தன்வசப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். இதுபோன்ற சிறுபான்மையின நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிபுணா்களைக் கொண்டு திறம்பட நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அவற்றைத் தன்வசப்படுத்தினால், அந்த நிறுவனங்களும், அவற்றின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும் முற்றிலுமாக சீா்குலைந்து விடும்.

இது சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், நாங்கள் சேவை செய்து வரும் பெரும்பான்மை மக்களுக்கும் பேரதிா்ச்சியையும் பாதிப்பையுமே ஏற்படுத்தும். மேலும், வழிபாட்டுத் தலங்களைக் கையகப்படுத்துவது வரை நீளும் இந்தச் சட்டத் திருத்தம், சிறுபான்மையினருக்கு அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் மத்திய அமைச்சரிடம் விளக்கினோம்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் உள்துறை அமைச்சா் அமித் ஷா மிகவும் அமைதியாகவும், திறந்த மனதுடனும் எங்கள் கருத்துக்களைக் கேட்டறிந்தாா். இதுகுறித்து நோ்மறையாகப் பரிசீலிப்பதாக அவா் உறுதி அளித்துள்ளாா் என்றாா் வில்சன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.