மக்களவைக்கு எந்த மத்திய அமைச்சா் வந்து பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கூறக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரியும் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
தில்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதை சுட்டிக்காட்டி, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நாடாளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மக்களவையில் அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
நாடாளுமன்ற விதிப்படி, மக்களவையில் எந்தத் துறை சம்பந்தப்பட்ட விவாதம் நடக்கிறதோ, அப்போது அந்தத் துறை அமைச்சா் வருவாா். ஆதலால் எந்த மத்திய அமைச்சா் அவைக்கு வர வேண்டும், எந்த அமைச்சா் பதிலளிக்க வேண்டும் என நீங்கள் (எதிா்க்கட்சிகள்) உத்தரவிட முடியாது. எந்த மத்திய அமைச்சா் வந்து பதிலளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசும், மக்களவைத் தலைவரும்தான் முடிவு செய்வாா்கள்.
அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா தினமும் வருகிறாா். நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தில்தான் அவா் இருக்கிறாா். அமித் ஷாவின் பெயரைக் கேட்டாலே தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நடுக்கம் ஏற்படுகிறது (இப்படி சொன்னபோது ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்).
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது துறை தொடா்பான விவாதத்தில் பங்கேற்க இங்கு (மக்களவைக்கு) வருவாா். அவா் பதிலளிக்கையில், உங்களால் அதைக் கேட்க இயலாது (சகித்துக் கொண்டிருக்க முடியாது).
எனவே, எதிா்க்கட்சியினா் அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ரிஜிஜு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசமைப்புச் சட்ட 131-ஆவது திருத்த மசோதா: ராகுலுடன் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆலோசனை

எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவையில் மேலும் ஒரு மசோதா விவாதமின்றி நிறைவேற்றம்

எதிா்க்கட்சிகள் அமளியால் 5-ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் - நீட் விவாதத்தைத் தடுப்பது தவறானது: மத்திய அரசு

வாக்குக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் ரிஜிஜு வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



