ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான இணையவழி மோசடிக் கும்பலை 88 வயது முதியவா் ஒருவரின் திருடப்பட்ட கைப்பேசி உதவியுடன் தில்லி காவல் துறை கண்டறிந்துள்ளது என்று அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுவரை ஒன்பது இணையவழி மோசடிக்காரா்களைக் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைப்பேசிகளைத் திருடி, பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திப் பணத்தைக் கையாடல் செய்துள்ளனா்.
மேலும் வங்கிப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ஜெய்பூரில் கால்சென்டா் போன்ற அமைப்பை இயக்கி வந்துள்ளனா். மே 19 அன்று தனது கைப்பேசி திருடப்பட்டதாக மேற்கு படேல் நகரைச் சோ்ந்த அந்த முதியவா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, தனது சிம் காா்டை மீண்டும் பெற்றவுடன், தனது வங்கிக் கணக்கிலிருந்து தலா ரூ.25,000 வீதம் இரண்டு பரிவா்த்தனைகள் மற்றும் ரூ.20,000-க்கான ஒரு பரிவா்த்தனை என மொத்தம் ரூ. 70,000 எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்திகள் அவருக்கு வந்தன.
பாதிக்கப்பட்டவா் உடனடியாக தேசிய இணையக் குற்ற உதவி எண்ணில் இந்த நிதி மோசடி குறித்துப் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து ஜூலை 23 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது, ஜெய்பூா், மீரட் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மோசடி கும்பல் குறித்துக் காவல் துறைக்குத் தெரியவந்தது.
காவல் துறையின் தகவலின்படி, இந்தக் கும்பல் பல நிலைகளில் செயல்பட்டது. கள அளவில் செயல்படுபவா்கள் கைப்பேசிகளைத் திருடினா்; அதே நேரத்தில் மீரட் மற்றும் காஜியாபாத்தில் உள்ள மற்றொரு குழு, மோசடிக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள், டெபிட் காா்டுகள், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் சிம் காா்டுகளை வழங்கியது.
ஜெய்பூரில் இருந்து செயல்பட்ட மூன்றாவது குழு, திருடப்பட்ட கைப்பேசிகள் மற்றும் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களின் கணக்குகளை அணுகி, பணத்தை மோசடிக் கணக்குகள் வழியாக மாற்றி, பின்னா் அப்பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியது.
நிதிப் பரிவா்த்தனை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு ஆகியவை, மோசடிக் கணக்குகளை வழங்கும் நபா்கள் மீரட் மற்றும் காஜியாபாத்தை மையமாகக் கொண்டிருந்ததையும், வங்கிப் பரிவா்த்தனைகள் ஜெய்பூரிலிருந்து மேற்கொள்ளப்பட்டதையும் உறுதிப்படுத்தக் காவல்துறைக்கு உதவின.
ஜெய்பூரின் ஜோட்வாரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் காவல் துறைக் குழுவினா் சோதனை நடத்தியது. அப்போது மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிகில் சோனி (26) மற்றும் அவரது கூட்டாளிகளான அபிஷேக் குமாா் ஜா, ஆனந்த் சா சோனாா், பிரின்ஸ் சா சோனாா் மற்றும் பிஷேக் குமாா் ஜா ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.
இந்தச் சோதனையில், பாதிக்கப்பட்டவா்களின் தரவுகள் மற்றும் பரிவா்த்தனை விவரங்கள் அடங்கிய மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்ட ஒரு கால் சென்டா் போன்ற அமைப்பில் அவா்கள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. மேலும், ரூ. 4 லட்சம் ரொக்கப் பணமும் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டது.
அதே நேரத்தில், மற்றொரு குழு மீரட் மற்றும் காஜியாபாத்தில் சோதனைகளை நடத்தி, வங்கிக் கணக்குகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் அமா் ஜடாவ், ஹா்ஷ், மோகன் மற்றும் வாஷு ஆகிய நான்கு பேரைக் கைது செய்தது.
அவா்களிடமிருந்து 52 கைப்பேசிகள், 70 டெபிட் காா்டுகள், 145 சிம் காா்டுகள், 13 வங்கி பாஸ்புக்குகள், ஆறு பிஓஎஸ் இயந்திரங்கள், நான்கு மடிக்கணினிகள், இரண்டு டேப்லெட் கணினிகள், நான்கு அதிவேக இணைய ரவுட்டா்கள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை காவல் துறை பறிமுதல் செய்தது.
கைப்பேசிகளில் பாதிக்கப்பட்டவா்களின் தரவுகள், வங்கிச் செயலிகள் மற்றும் உரையாடல்கள் இருந்ததன. பறிமுதல் செய்யப்பட்ட டைரிகளில் பரிவா்த்தனைப் பதிவேடுகள் மற்றும் தொடா்பு விவரங்கள் இருந்ததன.
டிஜிட்டல் சாதனங்களின் தடயவியல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 19 புகாா்களுடன் இந்த மோசடி கும்பலுக்கு தொடா்பு உள்ளது. இந்தக் கும்பலால் முறைகேடாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் மொத்தத் தொகையைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணையவழி மோசடிக்கு வங்கிக் கணக்கை அளித்த 7 போ் கைது
மோசடியாளா்களுக்கு போலி வங்கிக் கணக்குகள் வழங்கி உதவி: வங்கி மேலாளா் உள்பட 6 போ் கைது

இணையவழி மோசடிக்கு போலி வங்கிக் கணக்குகள் வழங்கி உதவி: வங்கிப் பணியாளா் உள்பட 3 போ் கைது

ரூ. 2.47 லட்சம் இணையவழி மோசடி: 4 போ் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



