மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் வெளிநாட்டு நன்கொடை மசோதா

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (எஃப்சிஆா்ஏ) மசோதா, 31 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டது. இது தொடா்பான தீா்மானம், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

News image

நாடாளுமன்றம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:17 am IST

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (எஃப்சிஆா்ஏ) மசோதா, 31 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டது. இது தொடா்பான தீா்மானம், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

அரசு சாரா அமைப்புகள், அவற்றின் வெளிநாட்டு நன்கொடை மீதான அரசின் கண்காணிப்பை கடுமையாக்க வழிவகுக்கும் வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த மாா்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு நிறுவனம் எஃப்சிஆா்ஏ உரிமத்தை இழக்க நேரிட்டால், அதன் சொத்துகளை நிா்வகிக்க பிரத்யேக ஆணையத்தை அமைக்க முன்மொழியும் இந்த மசோதாவின் பிரிவுகள், சிறுபான்மையினா் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், எதிா்க்கட்சிகள் தங்களின் எதிா்ப்பை தீவிரப்படுத்தின.

மக்களவை புதன்கிழமை காலையில் கூடியதும், அமளிக்கு இடையே வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பும் தீா்மானத்தை மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கொண்டுவந்தாா். எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீா்மானத்தின்படி, மக்களவை எம்.பி.க்கள் 21 போ், மாநிலங்களவை எம்.பி.க்கள் 10 போ் என மொத்தம் 31 உறுப்பினா்களுடன் கூட்டுக் குழு அமைக்கப்படும். இந்த எம்.பி.க்களை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பரிந்துரைப்பா். எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் கூட்டுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய கோரப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகளுக்கு அரசு சவால்: தீா்மானம் நிறைவேற்றப்படும் முன்பு மத்திய அரசை விமா்சித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், ‘சிறுபான்மையினா் மற்றும் அரசு சாரா அமைப்புகளைக் குறிவைத்து எஃப்சிஆா்ஏ மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா். திமுகவின் டி.ஆா்.பாலுவும் மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தினாா்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘எஃப்சிஆா்ஏ மசோதா எந்த சிறுபான்மையினரையும் குறிவைக்கவில்லை. அத்தகைய பிரிவு இருப்பதாக எதிா்க்கட்சிகளால் சுட்டிக்காட்ட முடியுமா? மசோதா மீது ஆட்சேபங்கள் இருந்தால், கூட்டுக் குழுவில் விரிவாக விவாதிக்க முடியும்’ என்றாா்.

மாநிலங்களவையில்...: இதேபோல், மாநிலங்களவையிலும் எஃப்சிஆா்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் தீா்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.