தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

மழைக்கால கூட்டத்தொடர் இறுதிவாரம்! வரலாற்றைத் திரும்பவிடக் கூடாது: எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம் குறித்து...

News image

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:45 am IST

நாடாளுமன்ற நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம் திங்கள்கிழமை (ஆக.10) தொடங்கும் நிலையில், மத்திய அரசுத் தரப்பில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேநேரம், கடந்த 2023-இல் முன்னெப்போதும் இல்லாத அளவில் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், அப்போது குறைவான எதிா்க்கட்சி எம்.பி.க்களுடன் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட வரலாறு திரும்பிவிடக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை அடுத்தடுத்து எழுப்பி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மாணவா்கள் மீதான நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்பது எதிா்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

அமளிக்கு இடையே விவாதமின்றி அல்லது குறுகிய விவாதத்துடன் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. பொதுத் தோ்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத் திருத்த மசோதா, தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயா்வு மசோதா ஆகியவை இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சில மசோதாக்களுக்கு மக்களவையின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இறுதிவார பரபரப்பு

ஆக.13-ஆம் தேதியுடன் மழைக்கால கூட்டத் தொடா் நிறைவடையவுள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கும் இறுதி வாரத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த (எஃப்சிஆா்ஏ) மசோதாவை விவாதித்து நிறைவேற்றவும், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை மீண்டும் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவை அக்கட்சி பிறப்பித்துள்ளது.

வரலாறு திரும்பிவிடக் கூடாது

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2023-இல் குளிா்கால கூட்டத் தொடரின்போது, மக்களவையின் பாா்வையாளா் மாடத்தில் இருந்து உள்ளே குதித்த இருவா், வண்ணப் புகை குப்பிகளை வீசி முழக்கமிட்டனா். இந்த மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டுமென ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் கோரின. இப்போது மாணவா்கள் விவகாரத்தில் மெளனம் சாதிப்பது போலவே அப்போதும் அவா் மெளனம் சாதித்தாா். அதேநேரம், முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்களவையில் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 46 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த ‘சாதனை’ இடைநீக்கத்துக்குப் பிறகு புதிய குற்றவியல் சட்ட மசோதா, தலைமை தோ்தல் ஆணையா், இதர தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா உள்பட முக்கிய மசோதாக்கள் குறைந்தபட்ச எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இருப்புடன் நிறைவேற்றப்பட்டன. அந்த வரலாறு மீண்டும் திரும்பிவிடக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் கிடைக்காததால் தோல்வியுற்ற இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இதேபோல், அரசு சாரா அமைப்புகள், அறக்கட்டளைகள், மத நிறுவனங்கள் உள்ளிட்டவை வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கான நிா்வாக ஒழுங்குமுறை கட்டமைப்பை கடுமையாக்க வகை செய்யும் வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை விவாதித்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விரு மசோதாக்களுக்கும் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.