நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகம் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அமைச்சா்கள் குழு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது.
தில்லி கடமை பவனில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி, கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயந்த் செளதரி (ராஷ்ட்ரீய லோக் தளம்), கே.ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்) உள்ளிட்டோா் பங்கேற்ாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள், இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முக்கியமாக, வருமான வரி சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
மேலும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, பிறப்பு - இறப்பு பதிவுச் சட்ட திருத்த மசோதா, வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் திருத்தச் சட்ட மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட ஆளும் கூட்டணி கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து மேற்கண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீட் வினாத்தாள் கசிவு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் தயாராகிவரும் நிலையில், அவா்களுக்கு பதிலடி தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயா்வு: அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல்

மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம்

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



