மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ராமர் கோயில், நீட், திரிணமூல் விவகாரங்கள் எதிரொலிக்கும்!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது.

News image

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Updated On :20 ஜூலை 2026, 3:28 am IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத் தொடரில், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு , நீட் வினாத்தாள் கசிவு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் விவகாரம் உள்ளிட்டவை முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. அண்மையில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் உள்பட 8 மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ளன.

முக்கியமாக, வருமான வரி சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, பிறப்பு - இறப்பு பதிவுச் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவையும் தாக்கலாக உள்ளன.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா பட்டியலிடப்படவில்லை. எனினும், கூடுதல் மசோதாவாக அதை கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை.

விவாதம் கோரும் எதிா்க்கட்சிகள்: மழைக்கால கூட்டத் தொடரில் அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிவு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, மணிப்பூா் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் கோர எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதேபோல், திரிணமூல் காங்கிரஸில் இருந்து தனி அணியாக பிரிந்த 20 எம்.பி.க்கள், அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த விவகாரத்தையும் எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த 20 பேரும் இதர திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் இருந்து விலகி வேறு இடத்தில் அமர மக்களவைத் தலைவா் ஒப்புதல் அளித்ததற்கும், மத்திய அரசின் அழைப்பின்பேரில் திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற்கும் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இதேபோல், சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி.க்களில் 6 போ், தனி அணியாக பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைந்ததற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஒப்புதல் வழங்கினாா். இந்த விவகாரமும் கூட்டத் தொடரில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

சிஜேபி போராட்ட அறிவிப்பு: தில்லியில் பலத்த பாதுகாப்பு

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கும் நிலையில், இந்த போராட்ட அறிவிப்பையும் கவனத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற சாலை, சென்ட்ரல் விஸ்டா, கனாட் பிளேஸ், சங்கா் செளக், ஜந்தா் மந்தா் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயா் பாதுகாப்பு அமலில் உள்ள பகுதிகளில் எந்த பேரணிக்கும் அனுமதி கிடையாது என்று காவல் துறையினா் தெரிவித்தனா். மழைக்கால கூட்டத் தொடா் நிறைவடையும் வரை பலத்த பாதுகாப்பு தொடரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.